Politics

“வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு என்றும் தலைவணங்காது!” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 -26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய பதிலுரையில்,

“எல்லாருக்கும் எல்லாம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் 14.3.2025 அன்று சட்டமன்றத்தில் முன்வைத்த வரவு - செலவு திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த நான்கு நாட்களாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கைக்கும், ஒன்றிய அரசு அளித்திருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒன்றிய அரசின் நிதிநிலை இந்தியாவினுடைய ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமான நிதிநிலை அறிக்கையாக அமைந்திருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு மட்டுமான ஒரு நிதிநிலை அறிக்கையாக ஒன்றிய அரசினுடைய நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

ஆனால் நமது முதலமைச்சருடைய வழிகாட்டுதலின்படி நம்முடைய மாநில அரசு அளித்திருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய நோக்கில் அமைந்துள்ளது. எப்படி புவியிலே வாழக்கூடிய மக்களுக்கு வேறுபாடு இல்லாமல் வான்மழையானது அத்தனை பேருக்கும் சமமாக பொழிகிறதோ அதைப்போல முதலமைச்சர் சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோள் போல் அனைத்து பகுதிகளையும் சமமாக பாவித்து தமிழ்நாட்டினுடைய எல்லா பகுதிகளுக்கும் தேவையான உரிய வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க எங்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அதன் காரணமாகவே தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று அனைவரும் பாராட்டக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கி இருக்கக்கூடிய நிதி ரூ.19,068 கோடி மட்டும் தான். ஆனால் உத்தர பிரதேசத்திற்கு 2025 - 26 ஆண்டுக்கு மட்டும் வழங்கியுள்ள தொகை ரூ.19,858 கோடி. நமக்கு மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொகையை ஒரே ஆண்டிலே உத்தரபிரதேசத்துக்கு வழங்குகிறது.

இப்படி நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்தாலும் கூட இந்தியாவிலேயே மிக அதிகமான மதிப்பீட்டிலான சென்னை இரண்டாம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசனுடைய நிதி உதவி இன்றி சொந்த நிதி ஆதாரங்களை கொண்டு தமிழ்நாடு செயல்படுத்த ஆரம்பித்தது.

மேலும், இந்திய பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்த பின்னர் தான் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசினுடைய பங்கினை ஒன்றிய அரசு வழங்கியது. உலகில் உள்ள பல நாடுகள் செமிகண்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரவு செலவு குறித்த புள்ளி விவரங்களை மட்டும் கொண்டதாக அமையவில்லை. பேரறிஞர் அண்ணா வழியில் தமிழ்நாட்டினுடைய வளமான எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளம் அமைத்திடும் வகையில் உயரிய நோக்கங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

திமுக ஆட்சியில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 10649 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சிப்காட் மூலம் 9 தொழில் பூங்காதான் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 32 தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டது. 28 தொழிற்பேட்டைகள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செமி கண்டக்டர்பூங்காக்கள் கோவை சூலூர் மற்றும் பல்லடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வேலூர், சேலம், தஞ்சை, ஒசூர் போன்ற பல நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளின் பசியை போக்க முதல்வர் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டத்தை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. திராவிட மாடல் அரசு அறிமுகம் செய்த மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை நாடே வியந்து பார்க்கிறது.

சுமார் 1.15 கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. பாஜக ஆளும் மராட்டிய மாநிலத்தில் இதேபோன்று ஒரு திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. தேர்தல் முடிந்த பிறகு முதல்வேலையாக 15 லட்சம் பயனாளிகளை திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளனர். தமிழ்நாடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் கூட நாம் வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம்.

நவீன குலக்கல்வி திட்டத்தை ஒன்றிய அரசு நம்மிடம் திணித்து வருகிறது. தமிழ் மொழியை பாதுகாத்திட மிக மிக குறைவான நிதியைத்தான் ஒன்றிய அரசு ஒதுக்கியது. இந்தி, வடமொழிகளை வளர்க்க ஒன்றிய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழ் மொழியை விட வடமொழிக்கும் இந்தி ஆகிய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மாற்றான் தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு பழங்குடி மக்கள் பேசக்கூடிய மொழிகளுக்கும் உரிய கவனம் கொடுக்கக்கூடிய ஒரு அரசாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கும் உயர்கல்வியை கொண்டு சேர்ப்பதை தாரக மந்திரமாக கொண்டு தமிழ்நாடு அரசு இயங்கி வருகிறது. சாதிய பாகுபாட்டை வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுத்தும் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு புறக்கணிக்கிறது. இதற்கு மாறாக உருவாக்கப்பட்டதுதான் கலைஞர் கைவினைத் திட்டம்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான நபர்கள் வந்ததாக பெருமையாக சொல்கிறார்கள். ஆனால் மதுரையில் உள்ள கலைஞரின் நூலகத்துக்கு 14 லட்சத்துக்கும் மேலானவர்கள் வந்துள்ளனர். கீழடி அரங்காட்சியகத்திற்கு 6 லட்சம் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இதுதான் தமிழ்நாட்டிற்கான பெருமை.

ஐந்தாண்டுக்கு ஒரு லட்சம் என ஆமை வேகத்தில் பசுமை வீடு திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்டது. அதில் 25 சதவிகிதம் வீடுகள் கட்டி முடிக்காமல் இருந்தது. திமுக ஆட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2030 ஆண்டுக்குள் 8 லட்சம் குடிசை வீடுகளை கான்கீரிட் வீடுகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

மேலும், ரூ.38000 கோடி குடிநீர் திட்டத்தின் மூலம் 3 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர். 2011 முதல் 2021 வரை ஆண்டுக்கு சரசரியாக 2077 கோடி ரூபாயை அதிமுக ஆட்சி விளையாட்டு துறைக்கு ஒதுக்கியது. அதிமுக ஆட்சியில் 3 விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு.விளையாட்டு துறைக்கு ரூ.1933 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதுவரை 93 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கியுள்ளோம்.

ஒன்றியஅரசு கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி என எதையும் தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறது. 2000 கோடி ரூபாய் அல்ல 10000 கோடி கொடுத்தாலும் கொள்கையை இழக்க மாட்டோம். வடக்கே இருந்து வரும் ஆதிக்கத்துக்கு எந்த காலத்திலும் தமிழ்நாடு தலைவணங்கியதில்லை. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சி சக்கரம் தமிழ்நாட்டில் சுழலவில்லை. கனிஷ்கர் ஆட்சி என்பது தெற்கே வந்ததில்லை; அவுரங்கசீப்பினாலேயே தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை.

ரூ.10,000 தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என அண்ணன் தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.2000 கோடி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மடிக்கணினி மதிப்பு ரூ.20000 என்ற அளவில் வாங்கப்படும். அண்ணன் தங்கமணி அவர்கள் கூட்டல் கழித்தல் கணக்கை இங்கே போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி கூட்டல் கழித்தல் கணக்குகளை எங்கோ அமர்ந்து கொண்டு இன்னொருவர் போடுகிறார்.

ஏனெனில் அதிமுக தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர். எங்களோடு நீண்ட காலமாக அதிமுகவினர் களமாடி வருகின்றனர். அதிமுகவை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடம் கவனமாக இருங்கள். வேறிடத்தில் இருந்து வரும் கணக்குகளை அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதனைக் கேட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிரிக்கிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதிமுகவின் மடியில் உள்ள கணத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி நடக்கிறது. இதனை உங்கள் மீது கொண்ட உரிமை அன்பின் அடிப்படையில் கூறுகிறேன்.”

Also Read: “நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகள் தலைவிரித்தாடி வருகிறது!” : செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!