Politics
“எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏதுமில்லை.. ஒருபோதும் சமரசம் கிடையாது..” - அமைச்சர் அன்பில் மகேஸ் !
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10 தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று அவமதித்து பேசினார். இதற்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதன் காரணமாக தனது கருத்தை தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார்.
இதைத்தொடர்ந்து தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாவை அடக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் நாடாளுமன்றத்தில், தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்ததாக தர்மேந்திர பிரதான் பேசிய பொய்யை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தினார்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு குறித்து அவதூறு பரப்பும் தர்மேந்திர பிரதானுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் கொடுத்து, கண்டனம் தெரிவித்து, கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்ட கல்வி முறை உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்த முடிவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. மனப்பாட முறையிலிருந்து விலகி, கருத்தரியல்பகைப்படி (concept-based learning) கற்றல் முறையை தமிழக அரசு ஊக்குவித்ததால், மாணவர்கள் தொழில்முறை துறைகளில் இந்தியாவிலும் உலகளவிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
தமிழ்நாட்டின் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர், அதே நேரத்தில் சிறு எண்ணிக்கையான 15.2 லட்சம் மாணவர்கள் மட்டும் 1,635 CBSE பள்ளிகளில் கல்வி பயில்கிறார்கள்.
எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய மூன்றாவது மொழிக்கான எந்த ஒரு அவசியமும் தமிழ்நாட்டில் இல்லை என்பதற்கு இதுவே மிகப்பெரிய சான்றாகும். மூன்றாவது மொழிக்கான தேவையே இருந்தால், ஏன் பெரும்பாலான மக்கள் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளை தேர்வு செய்கிறார்கள்? மக்கள் விருப்பத்தை புரிந்து, அதை மதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் இரண்டு மொழிக் கொள்கையில் ஆங்கிலம் ஏற்கனவே உள்ளது. இது மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை வழங்குவதுடன், அவர்கள் சொந்த மரபு, மொழி மற்றும் பண்பாட்டுடன் இணைந்திருக்கவும் உதவுகிறது.
தமிழ் என்பது ஒரு மொழியைத் தாண்டி, எங்கள் மூலாதாரத்துடன், வரலாற்றுடன், பண்பாட்டுடன் தொடர்பு கொள்ளும் பாலமாகும். தமிழ் எங்கள் பெருமை, ஆங்கிலம் உலகத்துடன் இணையும் வழி - இதுவே நாங்கள் கடைப்பிடிக்கும் முன்னேற்ற வழி.
அதனால், தமிழக மாணவர்கள் இருமொழிக் கல்வியில் மிகச்சிறப்பாக முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்களுக்கு தேவையில்லாத மூன்றாவது மொழியை கட்டாயமாக விதிப்பது ஏன்?
ஒன்றிய அமைச்சரிடம் நான் கேட்க விரும்புகிறேன்:
தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த தொழில்முனைவோர்கள், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வரும் நிலையில், ஏன் அதனை மாற்ற வேண்டும்?
ஏன் NEP என்ற ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை (one-size-fits-all model) தமிழ்நாட்டுக்கு கட்டாயமாக்க வேண்டும்?
இது மொழிக்கான போராட்டம் மட்டும் அல்ல - மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்கும் கல்வி முறையை பாதுகாப்பதற்கான போராட்டம். தமிழ்நாடு தனது மாணவர்களுக்கு சிறந்ததை வழங்குவதில் எந்தவிதமான சமரசத்திற்கும் செல்லாது. தயவுசெய்து நன்றாக செயல்படும் அமைப்பை மாற்ற வேண்டாம்!
இதற்கு முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள பதிவில், “15.03.2024 தேதியிட்ட கடிதம், தேசிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதல் அல்ல. அதற்காக குழு அமைத்து, அதன்படி முடிவெடுக்கப்படும் என்றுதான் அக்கடிதத்தில் தெளிவாக கூறியிருந்தோம். எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏதுமில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை நாட்டின் பலமே தவிர பலவீனமல்ல” என்று குறிப்பிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.
Also Read
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!