Politics

பாஜகவுக்கு எதிராக மக்களே வெகுண்டு எழுவார்கள் - அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை !

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வானது ஓட்டேரி முத்து நகர் மற்றும் சூளையில் உள்ள KM கார்டன் தெருவில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று வருகிறார்கள். தினமும் ஆயிரம் நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள திமுக களத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பாருங்கள், அவர்கள் கிடைக்கிறாரா?

களத்தில் ஒன்றிணைந்து மக்களோடு திமுக பயணித்து வருகிறது. வரும் சட்டமன்றத்தேர்தலில் 200 நிச்சயம் 234 எங்கள் லட்சியம். பாஜக ஏற்கனவேமக்களால் விரட்டப்பட்ட இயக்கம். மதத்தால், இனத்தால் பிரிவினையை உண்டாக்க நினைத்தவர்களுக்கு தமிழக மண்ணில் இடமில்லை என்பதை அறிந்த பிறகு மாணவச் செல்வங்கள் இடையே இந்த சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். மோடி சென்ற இடமெல்லாம் எப்படி கோ பேக் மோடி என்றார்களோ, அதுபோல் இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறவர்களுக்கு எதிர்ப்பாக கோ பேக் கோ பேக் என்ற குரல் தான் தமிழகத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஊடக வெளிச்சத்திற்காக இரண்டு நாட்கள் சென்று இருப்பார்கள். அதன்பிறகு காணவில்லை. இந்த சூழ்நிலை தொடருமானால் மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.எப்போதெல்லாம் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதோ இன்னும் 10 அடி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சி என சொன்னார்கள். ஆனால் 2,670 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. கோவில்கள் புரணமைப்பு பணிகளுக்கு அரசின் சார்பாக 300 கோடி முதலமைச்சர் வழங்கியுள்ளார். 340 கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் புதிய வேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பயணித்து வருகிறது.

இவ்வளவு பேசுகிற அவர்கள் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை 2000 கோடி 5000 கோடி 10,000 கோடி இழப்பு என்றார்கள். ஆனாலும் எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தின் மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் பாஜகவினர் ஒன்றிய அரசிடம் கேட்டு நிதியை பெற்று தர வேண்டும் முயற்சிகள் ஈடுபட வேண்டும். சென்னையில் 200 வார்டு உள்ளது. ஒரு வார்டில் கவுன்சிலர் ஆகியுள்ளார்கள். கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டத்தை எப்படி வழி காட்ட முடியும்” என்று விமர்சித்தார்.