Politics
" நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு தென்மாநிலங்களுக்கு அப்பட்டமான அநீதி" - கர்நாடக முதல்வர் விமர்சனம் !
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகையை வெகுவாக குறைந்துள்ள நிலையில், வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனிடையே 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை ஒன்றிய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு நடைபெற்றால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான நாடாளுமன்ற இடங்கள் வெகுவாக குறையும் சூழல் ஏற்படும். இதனால் தென்மாநிலங்களின் அதிகாரம் வெகுவாக குறைந்து விடும். இதனை குறிப்பிட்டு இந்த இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு அப்பட்டமான அநீதி என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தொகுதி மறு சீரமைப்பு மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இருக்குமா அல்லது தற்போதைய மக்களவை இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இருக்குமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் இருக்குமானால், அது நிச்சயமாக தென் மாநிலங்களைப் பாதிக்கும். வடக்கு மாநிலங்கள் வளர்ச்சியை எட்டவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் தவறிய நிலையில், தென் மாநிலங்கள் சிறப்பாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கின்றது.
வரலாற்றுப்பூர்வமாக இந்த பிரச்னையைத் தவிர்க்க 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இருக்கைகள் ஒதுக்கப்பட்டால் கர்நாடகாவின் தொகுதிகள் எண்ணிக்கை 28லிருந்து 26-ஆக குறையும். ஆந்திர பிரதேசத்தின் தொகுதிகள் எண்ணிக்கை 42லிருந்து 34-ஆக குறையும். கேரளாவின் தொகுதிகள் எண்ணிக்கை 20லிருந்து 12-ஆக குறையும். தமிழ்நாட்டின் எண்ணிக்கை 34 -ஆக குறையும்.
ஆனால் உத்தரபிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 80லிருந்து 91-ஆகவும், பீகாரில் 40லிருந்து 50 -ஆகவும் மத்திய பிரதேசத்தில் 29லிருந்து 33 ஆகவும் உயரும். இது அப்பட்டமான அநீதி என்றும் இதைப் பொருத்துக்கொள்ள முடியாது. 1971 மக்கள்தொகைப்படி அல்லது தெற்கு மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைக்காமல் மறுசீரமைப்பு நடைபெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!