Politics

உண்மையை சொன்னால் முடக்கமா? : விகடன் இணையதள முடக்கத்திற்கு எழும் கண்டனங்கள்!

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறைக்கு முட்டுக்கட்டையிடும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மற்றொரு வஞ்சிப்பாக, தற்போது விகடன் இணையதள முடக்கம் அமைந்துள்ளது.

அமெரிக்காவிற்கு செல்வதுதான் உலக அரங்கில் தம்மை தனித்தியங்க வைக்கும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக மட்டுமே அரசுப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு விலங்கிட்டு அனுப்பப்படும் இந்தியர்கள் குறித்து வாய் திறக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

இதனை சுட்டிக்காட்டியதற்காகதான், விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு. இது போன்ற முடக்கங்கள் இப்போது தொடங்கியது அல்ல என்பதுதான் ஜனநாயகத்தை கூடுதலாக அச்சுறுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.

மோடி என்ற பா.ஜ.க.வின் முதன்மை முகம் அடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒன்றிய அரசு முன்னெடுக்கும் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் ஏராளம்.

குஜராத்தின் முதல்வராக மோடி பதவி வகித்த போது, அங்கு ஏற்பட்ட மதக் கலவரத்தினை சரிசெய்ய மோடி எதுவும் செய்யவில்லை என்ற உண்மை BBC ஊடகம் வெளிக்கொண்டு வந்தபோது, அதற்கு இந்தியாவில் பகிரங்கமாக தடை விதித்த வரலாறுதான் ஒன்றிய பா.ஜ.க.வினுடையது.

உலக அளவில் பெயர்பெற்ற ஊடகமான BBC-ன் வெளியீட்டை பொய் என கூற முடியாததே முடக்கத்திற்கு காரணமாகவும் அமைந்தது. இவ்வாறு, பா.ஜ.க.வின் அடக்குமுறை ஆட்சிக்கு சிக்கிய ஏராளமான ஊடகங்களில் ஒரு ஊடகமாகதான் தற்போது விகடனும் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும்” என தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக, ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராஜன், “இந்தியர்கள் கைவிலங்கிட்டு விமானங்களில் திருப்பி அனுப்பப்டுவதை தடுக்க, பிரதமர் அமெரிக்க அதிபரை சந்தித்தபோது கூட கேட்கவில்லை என்பதை கார்ட்டூன் போட்டு காட்டியுள்ளது விகடன். இதில் எந்த தவறும் இல்லை” என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

Also Read: இந்தி திணிப்பு : பாஜக அரசை கண்டிக்காமல் ஒளிந்திருக்கிறார் பழனிசாமி - அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் !