Politics

பிரேன் சிங் மட்டுமா பிழை செய்தார்? : முரசொலி தலையங்கம் கண்டனம்!

ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு மணிப்பூர் மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங். ஒரு மாநிலத்தையே நாசம் செய்துவிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து தனது பதவியை விட்டு விலகி இருக்கிறார் அவர். இவரையே தொடர்ந்து ஆள விட்டதும், அனுமதித்ததும் பா.ஜ.க. தலைமையின் மாபெரும் தவறாகும். மணிப்பூர் மக்களைப் பற்றி அவர்களுக்கு ஒரு துளிகூட அக்கறை இல்லை என்பதன் அடையாளம்தான் பிரேன் சிங் இரண்டாண்டு காலம் முதலமைச்சராக இருக்க விட்டது.

‘சோசியல் இன்ஜினியரிங்’ என்ற பெயரால் சமூகங்களுக்குள் மோதலை உருவாக்குவது பா.ஜ.க.வின் பாணி. அதனைத்தான் பல மாநிலங்களில் செய்து வருகிறது பா.ஜ.க. மணிப்பூரிலும் அதனைத்தான் செய்தது.

மணிப்பூர் மாநிலத்தில் 53 சதவிகிதமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினத் தகுதி கோரி வருகிறார்கள். மாநில மக்கள் தொகையில் 40 சதவிகிதம் உள்ள நாகா, குக்கி பிரிவினர் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். மைதேயி - குக்கி ஆகிய இரண்டு பிரிவினரும் மாறுபட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் விரிசல் அதிகம் ஆக்கப்பட்டு விட்டது. மைதேயி பிரிவினர் இதுவரை ஓ.பி.சி. பிரிவில் உள்ளனர். அவர்களை பழங்குடி பட்டியலில் சேர்ந்தால் தங்களது வாய்ப்புகள் பறிபோகும் என குக்கி பிரிவினர் நினைக்கிறார்கள்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி, எஸ்.டி. பட்டியலில் மைதேயி பிரிவைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குக்கி சமூகத்தவரை கோபம் கொள்ள வைத்தது. இதனை உணர்ந்து செயல்படவில்லை முதலமைச்சர் பிரேன் சிங். இப்படி ஒரு மோதல் ஏற்படும் என்பதை கணிக்கத் தவறினார் பிரேன் சிங். போராட்டக்காரர்களை அழைத்து தொடக்கத்தில் பேசாமல் அமைதி காத்தார் பிரேன் சிங். இவர் மைதேயி பிரிவினருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று குக்கி இனத்தினர் நம்பினார்கள். அப்படித்தான் பிரேன் சிங் நடந்து கொண்டார்.

குக்கி இனத்தவர் நடத்திய பேரணியைக் குலைக்கும் காரியங்களை மைதேயி இனத்தவர் செய்தார்கள். இது பெரும்பான்மை மாவட்டங்களில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறைகள் அனைத்தையும் மணிப்பூர் காவல் துறை வேடிக்கை பார்த்தது. மணிப்பூரில் துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும்.

மேலும், காவல் நிலையங்களில் புகுந்து போராட்டக்காரர்கள் துப்பாக்கிகளைத் தூக்கிச் சென்றார்கள். அதையும் பிரேன் சிங் அரசால் தடுக்க முடியவில்லை. இதன் உச்சமாக இரண்டு பெண்கள் ஆடை களையப்பட்டு நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படுவதும் - அதனை பெரும் கூட்டமானது வேடிக்கை பார்த்தபடி நடந்து செல்வதுமான காட்சிகள் வெளியானது.

பிரேன் சிங்கின் பேட்டியை ‘தினத்தந்தி’ நாளிதழ் தலைப்புச் செய்தியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிட்டதை எடுத்துக்காட்டி உள்ள முரசொலி நாளேடு, பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது பற்றி அந்த நிருபர் கேட்டபோது, “இது போல நிறைய நடந்துள்ளதே’’ என்று பதற்றமே இல்லாமல் சொன்னவர்தான் பிரேன் சிங்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி இந்த கொடூரச் சம்பவம் நடந்தது. இந்த வீடியோ ஜூலை மாதம் வெளியானது. வெளியான பிறகு, ஜூலை 18 ஆம் தேதிதான் கொடூரத்துக்குக் காரணமான சிலரை கணக்குக் காட்டுவதற்காக கைது செய்தார் பிரேன் சிங். இதன் பிறகுதான் ‘ஐயோ எவ்வளவு கொடூரம் நடந்து விட்டது’ என்று இந்த நாட்டின் பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.

பேட்டி அளித்தாரே தவிர பிரதமர் மோடி, இந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட மணிப்பூர் செல்லவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்குக் கூட அவர் மணிப்பூர் போகவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருமுறை போனார். அத்தோடு சரி. ஆனால் மணிப்பூர் இந்த இரண்டு ஆண்டுகளும் எரிந்து கொண்டுதான் இருந்தது. ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப்பட்டு இருக்கலாம். அமைதி என்பதே போய்விட்டது.

பிரேன் சிங் பதவி விலகிய பிப்ரவரி 9 ஆம் தேதியன்றுகூட மணிப்பூர் ரிசர்வ் படை முகாமில் இருந்து துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. தெளபால் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் படை முகாமுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளது. 6 தானியங்கி துப்பாக்கிகள், 3 ஏகே ரக துப்பாக்கிகள், 270 தோட்டாக்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இதுதான் கடந்த இரண்டு ஆண்டு மணிப்பூர் காட்சிகள் ஆகும். இதனை தடுக்கத் தவறியது பிரேன் சிங் மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா?

‘மைதேயி குழுக்கள் மாநில அரசின் ஆயுதங்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டார்கள்’ என்ற பொருளில் பிரேன் சிங் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இந்த ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சீலிடப்பட்ட உறையில் எழுதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்’ என்று மத்திய தடய அறிவியல் ஆய்வகத்துக்கு உத்தரவு போட்டுள்ளது. இதன்பிறகுதான் பிரேன் சிங் பதவி விலகி இருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகி இருக்க வேண்டிய பிரேன் சிங், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகி இருக்கிறார். இவரை ஆள அனுமதித்தது பிரதமர் மோடியின் குற்றமல்லவா? உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் குற்றமல்லவா?

Also Read: தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகள் மாற்றம் : யாருக்கு என்ன துறைகள் மாற்றம்?