Politics
IIT-களில் SC,ST,OBC மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி : மறுக்கப்படும் இடஒதுக்கீடு... சு.வெங்கடேசன் MP !
இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.களில் 2023 - 24 கல்வி ஆண்டில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 2484 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 % இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்த பதில் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "இந்தியாவில் உள்ள ஐஐடி களில் 2023 - 24 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ். சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி (922/10.02.2025) எழுப்பி இருந்தேன். அதற்கான பதிலை கல்வி இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் நாடாளுமன்றத்தில் தந்துள்ளார்.
நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 2484 பேர் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் என்று தெரிவித்திருக்கிறார். பதிலிலுள்ள மற்ற வரிகள் எல்லாம் எவ்வாறு ஒன்றிய அரசு ஐஐடி களுக்கு இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி இருக்கிறது, அதை ஐஐடி நிறுவனங்கள் எவ்வாறு அமலாக்குகின்றன என்பதை பற்றிய வெற்று விளக்கங்களாகவே உள்ளன. நான் கேள்வியில் எழுப்பி உள்ளது போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக துறைவாரியாக நிறுவன வாரியாக அமைச்சர் தரவில்லை. இது தற்செயலானதாக கருதப்படவில்லை.
முழு விவரங்களை தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படாததை அம்பலத்திற்கு கொண்டு வர வந்துள்ளது.
6210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2484 இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40% மட்டுமே வருகிறது. ஓ.பி.சி 27 %, எஸ்.சி 15%, எஸ் டி 7.5% என்றால் மொத்தம் 49.5 % இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும். இதன்படியே 590 இடங்களை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
பொதுப் பட்டியல் இடங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்களா? அல்லது அந்த இடங்கள் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக்கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.
நாடாளுமன்றத்தில் முழுமையான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடுமாறும் கேட்டு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்"என்று அதில் கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!