Politics

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்... திமுக வேட்பாளர் அறிவிப்பு - யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா, கடந்த 2023-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியை மீண்டும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அப்போது மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெரும் வெற்றி பெற்றார். இதனிடையே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் குணமாகி வீடு திரும்பிய அவர், மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2024, டிச.14 அன்று உயிரிழந்தார். மூத்த அரசியல் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதோடு, பிப்.5-ம் தேதி இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த சூழலில் இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என தி.மு.க தலைமை கழகம் தற்போது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து வி.சி.சந்திரகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

நெசவாளர் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார், முதுநிலை பொது நிர்வாகம் படித்துள்ளார். ஜவுளி மொத்த வியாபாரம் செய்துவரும் இவர், ஆரம்பத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து செயல்பட்டு வந்தார். மேலும் 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய இவர், திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதுடன், 2016 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் தோல்வியடைந்தார். பின்ன்ன்ர் 2021-ல் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டதால், வி.சி.சந்திரகுமார் போட்டியிட முடியாமல் போனது.

இந்த சூழலில் அண்மையில் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தொகுதியில் தற்போது திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சியின் ஆதரவோடு வி.சி.சந்திரகுமார் போட்டியிடவுள்ளார்.

Also Read: "விடியல் மக்களுக்குத்தான், மக்களுக்கு எதிரானவர்களுக்கு இல்லை" - எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் பதிலடி !