Politics

அண்ணா பல்கலை. விவகாரம் : " எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்கிறார்கள் " - முதலமைச்சர் விமர்சனம் !

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவரால் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக உயர்நீதிமன்றமே கண்டித்திருந்தது. அதோடு குற்றவாளி ஞானசேகரன் சார் என்று யாரிடமும் பேசவில்லை, அது மாணவியை மிரட்டுவதாக செய்தது என்று போலிஸார் விளக்கமளித்தும் அது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் தேவையின்றி அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சென்னையில் மாணவி சம்மந்தப்பட்ட சென்சிடிவ்வான வழக்கில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்கிறார்கள். அந்த பாலியல் வழக்கில் யார் சம்மந்தப்பட்ட இருந்தாலும் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் , குற்றவாளிகள் மீது தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

யார் அந்த சார் என்று பேட்ஜ் அணிந்து வந்திருக்கும் அதிமுகவினரை பார்த்து கேட்கிறேன். உங்கள் ஆட்சியில் இதுபோன்ற 100 சார்கள் இருந்தார்களே அவர்கள் எங்கே என்ற கேள்வியை எங்களாலும் கேட்க முடியும். யார் அந்த சார் என்று விமர்சிக்கும் அதிமுகவினர் முடிந்தால் ஒன்றிய அரசின் உதவியோடு யார் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். இந்த வழக்கில் அரசியல் செய்யவேண்டாம் என்று நீதிமன்றமே சொல்லியபின்னரும் அரசியல் லாபம், வீண் விளம்பரத்துக்காக அதிமுகவினர் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விவகாரத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி இல்லை, பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லும் குற்றச்சாட்டு உண்மை இல்லை. சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சுற்றுப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தான் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளன.

என் தலைமையிலான அரசை பொறுத்தவரை, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, எந்த தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, காவல்துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியமே தவிர வேறு ஏதும் இல்லை.

தி.மு.க அரசின் மீது களங்கம் ஏற்படுத்துகிறோம் என்ற முயற்சியில் உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களின் கல்வியை கெடுத்து விடாதீர்கள். முன்னாள் முதலமைச்சராகவும், இன்னாள் எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்ககூடிய எடப்பாடி பழனிசாமி, மாணவி பாலியல் வன்கொடுமை விவாரத்தில் தாழ்ந்து போகும் அளவிற்கு அரசியல் செய்துவருகிறார்.

மகளிருக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசின் மீது அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி, களங்கம் ஏற்படுத்த சிலர் எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் எடுபடாது! எடுபடாது! எடுபடாது!" என்று கூறினார்.

Also Read: “திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சி!” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!