Politics

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு - CPIM மாநில செயலாளர் அறிவிப்பு !

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்திததார்.

அப்போது பேசிய அவர், "ஒன்றிய பாஜக அரசு கடைபிடிக்கும் அராஜகப் போக்கின் விளைவாக வேலையின்மை கடுமையான பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை திணிக்கும் தீவிரமான வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்றைய தினம் யுஜிசி புதிய உத்தரவை விவாதத்திற்காக வெளியிட்டு உள்ளார்கள். பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசாங்கத்திற்கு இருக்கின்ற உரிமையை திரும்ப பெற்றுக்கொண்டு ஆளுநர் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அராஜகத்தின் உச்சம். இதை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டமன்றத்துக்கு செல்வதும் வெளிநடப்பு செய்வதும் என ஆளுநர் ஆர் என் ரவி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு சட்டமன்றம் மரபின்படி நடைபெற்று வருவதை காரணம் காட்டி வெளி நடப்பு செய்வதை வேலையாக வைத்திருக்கிறார் ஆளுநர்.

மாநில திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள். சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றி உள்ளார்கள்.மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.ஒன்றிய பாஜக அரசு, மாநிலத் திமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் நின்று போராட்டத்தை முன்னெடுப்போம்.

முன்னாள் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேசியதற்கும், மாநில செயலாளர் மாற்றப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் கட்சியில் ஜனநாயக நடைமுறைகளை தெரியாமல் சிலர் பேசுகிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கொள்கையை நிலை நிறுத்துவதில் திமுக இன்றளவும் நிலை நிற்கிறது. திமுகவின் ஆதரவு இல்லாமல் ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க சாத்தியமில்லை.ஒன்றிய பாஜகவை எதிர்க்க திமுகவோடு நின்று போராட வேண்டிய சூழல் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக ஆதரவளிக்கும்"என்று தெரிவித்தார்.

Also Read: தன்னாட்சி உரிமையை பறிப்பதை வாய்மூடி பார்த்துகொண்டிருக்க மாட்டோம்- ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!