Politics

"அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தை பாஜகவும் அதிமுகவும் அரசியலாக்குகிறது" - செல்வப்பெருந்தகை !

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சீரமைப்பு பணி நடக்கிறது.

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பம் பெறப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இணையதள முகவரிக்கு விருப்பமனுவை அளிக்கலாம். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 7 ஆம் தேதி காலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்படுகிறது.தற்போது, இந்த வழக்கை சிறப்பு குற்றப்புலனாய்வு குழு விசாரிக்கிறது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் செல்போன் கிடைத்துள்ளது. அந்த செல்போனை ஆய்வு செய்தாலே, "யார் அந்த சார்" என்று தெரிந்துவிடும். எந்த சார் ஆக இருந்தாலும் அவர் மாட்டி கொள்வார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் தொலைத்தொடர்பு ஆணையம் இருக்கிறது.

அதானிக்கு எதிரான போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினரும் கைது செய்யப்பட்டு, எவ்வித வசதியும் இல்லாத இடத்தில்தான் அடைத்து வைக்கப்படிருந்தனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பா‌.ஜ.க., அ‌.தி.மு.க. அரசியலாக்குகிறது.

Also Read: வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் : ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் பாராட்டு!