Politics

"கட்சியை விட்டு வெளியே போகட்டும்" - ஒரே மேடையில் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமதாஸ், அன்புமணி !

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தனது மூத்த மகளான காந்திமதியின் மகனான, முகுந்தனை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார் இதற்கு கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகந்தனுக்கு பதிவியா? என மேடையிலயே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென கோவமடைந்த ராமதாஸ் நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும். இல்லை என்றால் கட்சியை விட்டு போங்க என ராமதாஸ் தெரிவித்தார். மேலும் இந்த கட்சி என்னால் உருவாக்கப்பட்டது. கட்சியை உருவாக்கியவன் நான் எனவே என் சொல்லிற்கு கட்டுப்பட்டு இருப்பவர்கள் இருக்கட்டும். இல்லையென்றால் கட்சியை விட்டு போகட்டும் என பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அன்புமணி ராமதாஸ் கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்தார். பின்பு சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளேன். அங்கே என்னை வந்து பார்க்கலாம் என கூறி அவரது செல்போன் எண்ணை மேடையிலேயே கூறினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தொண்டர்கள் இரு குழுக்களாக பிரிந்து கோஷங்களை எழுப்பினர். மேலும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் ராமதாஸை செல்ல விடாமல் வாகனத்தை 10 நிமிடம் மறித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த நன்மைகள் என்னென்ன? - பட்டியலிட்ட ஆ.ராசா எம்.பி.!