Politics
பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் UGC -NET தேர்வு : எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? -சு.வே கேள்வி !
உதவி பேராசிரியர் பணிகளில் சேர UGC -NET தேர்வில் வெற்றி பெறுவது அவசியமானதாக இருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு இருமுறை தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தி வருகிறது. இந்த தேர்வை பல்லாயிரக்கணக்கானவர்கள் எழுதி வருகின்றனர்.
அதன்படி வரும் 2025-ம் ஆண்டுக்கான UGC -NET தேர்வு வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் அன்று இந்த தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூக வலைதள பக்கத்தில்,
"ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்?
ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.
கடந்த மாதம் தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.
தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும்.
ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும், பெற்றோர்களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர். ஆகவே இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் பிரதீப் சிங் கரோலாவுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!