Politics
'ஒரே நாடு ஒரே தேர்தல்' : "வாக்காளர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது" - TR பாலு எம்.பி பேச்சு !
ஒன்றிய பா.ஜ.க. அரசின் “ஒரு நாடு, ஒரு தேர்தல்” திட்டத்துக்கு வழிவகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா 17.12.2024 அன்று நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன்மேக்வால் அவர்களால் கேள்வி நேரம் முடிந்த பிறகு தாக்கல் செய்யப்பட்டது.
முதலில் கடந்த 16.12.2024 திங்கட்கிழமை அன்று தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால், திடீரென மசோதா நேற்று (17.12.2024) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்த தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இது தொடர்பாக கழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்க மக்களவையில் நோட்டீஸ் ஒன்றையும் சமர்ப்பித்தார்.
மசோதா தாக்கல் செய்வது தொடர்பான தகவலை அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்த உடனேயே டி.ஆர்.பாலு எழுந்து மசோதா மீதான தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். இந்த அரசியலமைப்புச் சட்ட 129வது திருத்த மசோதா தொடர்பாக தி்.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் , “இந்த ஒருநாடு, ஒருதேர்தல் சட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது, சாத்தியமில்லாதது. மேலும், இது செயல்பாட்டுக்கு வந்தால் நாட்டின் ஜனநாயகத்தையும் பன்முகத் தன்மையையும் அழித்திடும்” என்று கருத்துக் கூறியுள்ளார். அவர் கூறியதை அப்படியே மேற்கோள் காட்டினேன் என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்கள், “தாங்கள் ஏற்கனவே இது தொடர்பாக நோட்டீஸ் அளித்திருக்கிறீர்கள். எனவே, உரிய சமயத்தில் உங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். தொடர்ந்து அவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி திரு. ஓம் பிர்லா கட்சித் தலைவர்களை அழைத்தார்.
இதனையடுத்து தி.மு.க.வின் சார்பாக பேசிய டி.ஆர்.பாலு அவர்கள், “இந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற மக்களவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை. அப்படியில்லாத நிலையில் மசோதாவை தாக்கல் செய்ய அவைத் தலைவரான தாங்கள் எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் வினா எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்கள், மசோதா தாக்கல் செய்யலாமா கூடாதா என்பதை, தான் முடிவு செய்ய முடியாது அவைதான் முடிவு செய்ய வேண்டும். அது தொடர்பாகவே தற்போது உறுப்பினர்களின் கருத்து கேட்கப்படுவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு குறிப்பிட்டதாவது
"வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதியாக ஒருவரை ஐந்து ஆண்டு பதவிக் காலத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப சட்டரீதியாக உரிமை உள்ளது. அந்த உரிமையை ஒரே சமயத்தில் தேர்தல் (நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் சேர்த்து) என்று கூறி அந்த உரிமையைப் பறிக்க முடியாது.
அது மட்டுமல்ல, ஒரே தேர்தல் என்றால் கூடுதலாக 13,981 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதுடன் மேலும் தேவைப்படும் வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரங்களுக்கும் கூடுதலாக 9284 கோடி ரூபாய் அளவுக்கு அதிக பணச் செலவு ஏற்படும். இது மட்டுமல்லாமல் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 2015ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கபட்ட தனது 79வது அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்துக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற முடியாது என்பதால் இது சாத்தியமற்றது என்ற முடிவை கூறியுள்ளது. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது கொண்டு வரப்பட உள்ள அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
தி.மு.க.வைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யும் ஆரம்ப நிலையிலேயே கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தன. அதனால் மசோதாவை கூட்டுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து 220 உறுப்பினர்களும், எதிர்த்து 149 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன்படி ஒருநாடு, ஒருதேர்தல் தொடர்பான அரசியலமைப்புச் சட்டம் 129வது திருத்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க மக்களவை முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!