Politics

4-வது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சரானார் ஹேமந்த் சோரன்... நெருக்கடியிலும் வென்றது இந்தியா கூட்டணி !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 82 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், 81 தொகுதிகளுக்கு கடந்த நவ. 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் காங்கிரஸ், CPI(ML)(L), ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக போட்டியிட்டது.

இதில் பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களில், இந்தியா கூட்டணி மட்டும் 54 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக இன்று (நவ.28) பதவியேற்றுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தொண்டர்கள் மத்தியில் பதவி அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்க்வார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில், 1 ஆண்டு, 168 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். இதையடுத்து இரண்டாம் முறையாக கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியில் ஹேமந்த் சோரனும் முக்கிய நபராக இருந்ததால், ஒன்றிய பாஜக அரசு அவருக்கு தொல்லை கொடுத்தது.

தொடர்ந்து அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவையை ஏவி, சோதனை நடத்தியது. எனினும் அதற்கு அடிபணியாத ஹேமந்த் சோரன் மீது நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கடந்த ஜனவரி 31 அன்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து சிறை சென்றார்.

அங்கே அவருக்கு பலகட்ட தொல்லைகள், ஜாமீன் மறுப்பு என பல இன்னல்கள் ஒன்றிய பாஜக அரசு கொடுத்தது. இருப்பினும் தனது உறுதியை ஹேமந்த் சோரன் கைவிடவில்லை. சட்டப்போராட்டத்தை முன்னெடுத்த ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில மக்களும், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் உறுதுணையாக இருந்தனர்.

இதன் எதிரொலியாக சுமார் 5 மாதங்களுக்கு (150 நாட்களுக்கு) பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, தனது முதலமைச்சர் பதவியை அப்போது தற்காலிக முதல்வராக இருந்த சம்பாய் சோரன் ராஜினாமா செய்த நிலையில், மூன்றாவது முறையாக ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி இந்தியா கூட்டணி ஆதரவோடு மீண்டும் நான்காவது முறையாக ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். பாஜகவின் தொடர் தொல்லைகள், இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு, தனது உறுதியில் இருந்து பின்வாங்காமல் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Also Read: சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல், நிதியுதவி!