Politics
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு டி.ஆர்.பாலு எழுதி உள்ள கடிதத்தில், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்பு விழுமியங்களை பரப்பும் நோக்கத்தில் ஒரு தனித்துவமான, குறிப்பிடத்தக்க நிகழ்வாகும் என்றும், குடியரசுத்தலைவரின் உரையின் உள்ளடக்கத்தை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒன்றிய அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட குடியரசுத்தலைவரின் உரையில், "சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற சொற்கள் உட்பட அரசியலமைப்பின் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டி உள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவரின் உரை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிபடுத்தும் வகையில், அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பது நாடாளுமன்ற நடைமுறையில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள டி.ஆர்.பாலு, இதற்கான விவாதத்தை மக்களவை நிகழ்ச்சிக் குறிப்பில் இணைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!