Politics

பாஜக அணியில் சேர்ந்ததும் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அஜித் பவார்- வேலை செய்த மோடி வாஷிங் மெஷின்!

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் பவார் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் ரூ.25 ஆயிரம் கோடி மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2002-17ம் ஆண்டுக்கு இடையே மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி சர்க்கரை ஆலைகளுக்கு 25 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கியது. இந்த கடனை சர்க்கரை ஆலைகள் திரும்ப கொடுக்காத நிலையில், சக்கரை ஆலைகளை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விட்டது. ஆனால், இந்த சக்கரை ஆலைகள் குறைந்த விலைக்கு ஏலத்தில் விடப்பட்டது. இதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஊழலில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ர பவார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். ஆனால், அவர் பாஜக கூட்டணியில் இணைந்த சூழலில், இந்த பரிவர்த்தனையால் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு எந்த வித இழப்பும் ஏற்படவில்லை என்று கூறி அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ர பவார் ஆகியோர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை குறிப்பிட்டு பாஜக ஒரு வாஷிங் மெஷின் என்பது மீண்டும் நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

Also Read: மோடிக்கு லைசென்ஸ் கொடுத்துவிட்டு மவுனித்து விட்டது தேர்தல் ஆணையம் - காட்டமாக விமர்சித்த முரசொலி !