Politics

“இனி பிரசார் பாரதி அல்ல; பிரச்சார பாரதி” : LOGO மாற்றம் - காவிமயமான தூர்தர்ஷனுக்கு வலுக்கும் கண்டனங்கள் !

இந்தியாவில் பழம்பெரும் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் எனப்படும் DD தற்போது தனது லோகோவில் நிறத்தை மாற்றி சர்ச்சையில் சிக்கியுள்ளது. 1959-ல் நிறுவப்பட்ட இந்த தொலைக்காட்சியானது, ஹிந்தியில் உருவானது. அரசு தொலைக்காட்சியான இது, நாளடைவில் பல மொழி மக்களையும் சென்றடைய வேண்டும் என்று தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டது.

பொதிகை என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த சேனலிலும் வழக்கம்போல் பாஜக தனது அரசியல் தலையீட்டை வைத்தது. பாஜக அனைத்திலும் தங்கள் இந்தி மொழி ஆதிக்கத்தை திணிப்பதுபோல், இதிலும் திணிக்க எண்ணி, கடந்த ஆண்டு பொதிகை என்ற பெயரை மாற்ற முற்பட்டபோது, தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. எனினும் DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்தது ஒன்றிய பாஜக அரசு.

அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன், ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக பல்வேறு செய்திகளையும் கருத்துகளையும் மட்டுமே தெரிவித்து வந்தது. மேலும் பாஜக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதோடு, கட்சிக்கு ஆதரவாகவும் செய்திகள் வெளியிட்டு வருகிறது. தூர்தர்ஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டங்கள் தெரிவித்து வருகிறது.

அண்மையில் கூட, பெரும் சர்ச்சைக்குரிய படமான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தேர்தல் சமயத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அந்த படம் திரையிடப்பட்டது. இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் படத்தை ஒளிபரப்பு செய்த தூர்தர்ஷனுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் தாங்கள் பாஜக கூறுவதை தான் கேட்போம் என்று நிரூபிக்கும் வகையில், தங்கள் சேனலின் லோகோவை மாற்றியுள்ளது தூர்தர்ஷன் தொலைக்காட்சி. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் செய்தி தொலைக்காட்சியான DD News-ல் லோகோவின் நிறத்தை காவி நிறமாக மாற்றியுள்ளது. இதற்கு தற்போது நாடு முழுவதும் இருந்து வலுத்த கண்டனங்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தூர்தர்ஷனின் முன்னாள் CEO ஜவஹர் சிர்சார், இதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க Logo-வை காவி நிறத்தில் மாற்றியுள்ளது. அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில், நான் அதன் காவிமயக்கத்தை எச்சரிக்கையுடனும் உணர்வுடனும் கவனித்து வருகிறேன். இனி தூர்தர்ஷன் 'பிரசார் பாரதி' இல்லை; 'பிரச்சார பாரதி'!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசு தொலைக்காட்சி, இப்படி ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமின்றி, தங்கள் பணியை மறந்து லோகோ உட்பட அனைத்தையும் மாற்றியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. ஒரு அரசு சார்ந்த தொலைக்காட்சியை இப்படி காவிமயமாக்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. தேர்தல் சமயத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: “இது அண்ணனின் சீதனம்” : தமிழ்நாட்டு தேர்தல் வெற்றியின் கதாநாயகன் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ !