Politics

சர்வாதிகார பிடியிலிருந்து மீண்டெழும் மாநிலமாக, “மணிப்பூர்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இந்தியாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கும் மாநிலம், மணிப்பூர்.

இந்தியாவின் நாகலாந்து, மிசோரம், அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும், மியான்மரின் சங்காய்ங், சின் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நடுவில் அமைந்திருக்கும் மாநிலமாகவும் மணிப்பூர் விளங்குகிறது.

இந்நிலையில் பண்பு மாறாது வாழும் மணிப்பூர் பழங்குடியின மக்கள், தங்களின் தன்னுரிமைகளை மீட்க பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

எனினும், பழங்குடியின மக்களின் மீது இதுவரை தொடுக்கப்படாத வன்முறைகள், கடந்த ஒரு ஆண்டில் உச்சத்தை தொட்டுள்ளது.

தேசிய அளவில் ஒரு இனத்தை பெரிதாக்கி, ஒரே ஆளுமையை நிறுவிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகள், வரும் காலத்தில் இந்தியாவை என்னவாக்கும் என்பதற்கு ஒரு முன்னோட்டமாக மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிற கலவரம் திகழ்கிறது.

ஒரு பெரும்பான்மை சமூகம், ஆட்சியை தன் பக்கம் வைத்து கொண்டு, சிறும்பான்மை சமூகங்களை சூறையாடுவது தான், மணிப்பூர் கலவரத்தின் அடிப்படை.

மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பைரன் சிங், மெய்தி (Meitei) எனும் இனத்தை சார்ந்தவர். மணிப்பூரில் பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் இனமும் மெய்தி தான்.

மெய்திக்கு அடுத்தப்படியாக, பழங்குடியினர்களாக அடையாளப்படும், குகி (Kuki) மற்றும் சூமி (Zomi) இனத்தினர், தங்களுக்கான நிகராளிகளை (பிரதிநிதிகளை) சட்டமன்றத்தில் பெற்றிருப்பினும், உரிமைகளை இழந்துகொண்டு தான் வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, குகி மற்றும் சூமி இடத்தினருக்கு மட்டுமல்லாமல், மெய்தி இனத்தினருக்கும் ST தகுதி வழங்கிட வேண்டும் என்ற சிக்கல், சுமார் 40 ஆண்டுகளாக மணிப்பூரில் நீடித்து வருகிறது.

எங்களுக்கும் ST தகுதி வேண்டும் என மெய்தி இனத்தின் தலைவர்கள், 1982 மற்றும் 2001 ஆண்டுகளில் ஒன்றிய மற்றும் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அக்கோரிக்கைகள் மறுக்கப்பட்டன.

காரணம், மெய்தி இனத்திற்கு, இயல்பாகவே பெரும்பான்மை இருப்பதால், அரசு பணியிடங்கள், கல்வி நிலையங்கள் என அனைத்து துறைகளிலும், மெய்தி இனத்தவர்களே அதிகப்படியாக இருக்கின்றனர். இவ்வேளையில், ST தகுதி காரணமாக மட்டுமே, பயன்பெறும் குகி மற்றும் சூமி இனத்தவருடம் மெய்தி இனமும் இணைக்கப்பட்டால், இருக்கின்ற குறைந்தபட்ச உரிமைகளையும் குகி மற்றும் சூமி இழக்க நேரிடும் என்பது தான்.

எனினும், மெய்தி இனத்தின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்க, பா.ஜ.க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை, தடுக்க வேண்டும் என்பதற்காக, மாணவ அமைப்புகளும், குகி மற்றும் சூமி இனக்குழுக்களும் போராடி வந்தனர்.

ஆகவே, சினமடைந்த மெய்தி இனத்தினர் இராணுவ முகாம்களில் வைத்திருந்த ஆயுதங்களை திருடி, வெடி குண்டுகளை சூரையாடி வன்முறைக்கு வித்திட்டனர்.

இதனால், எண்ணற்ற குகி மற்றும் சூமி இனத்தினர் கூட்டாக கொல்லப்பட்டனர். பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடியது. குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தனர். சுமார் 70,000 மக்கள் தங்களின் வீடுகளை துறக்க நேரிட்டது. சுமார் 5,000 வீடுகள் தீயில் சாம்பலானது. சிறுபான்மையினர்களின் மத ஆலயங்கள் இடிக்கப்பட்டன.

பாலஸ்தீனத்திற்கு இணையான கொடூரங்கள் மணிப்பூரில் அரங்கேறின. எனினும், இதனை அமைதியாக ரசித்து பார்த்தவர்கள் தான், மெய்தி இனத்தை சேர்ந்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கும், பிரதமர் மோடியும்.

கலவரம் தொடங்கி, சுமார் 70 நாள்களுக்கு இவ்வகை வன்முறை நடக்கிறதா என்கிற அளவில், மோடியின் ஆட்டம் இருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு , முதன் முறையாக ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, கடந்த 7 ஆண்டுகளில் மணிப்பூரையே சுக்குநூறாக்கியுள்ளது.

இது போன்ற வன்முறைகள், உலக நாடுகளுக்கு தெரிந்தால், இந்தியாவின் பெயர் கெட்டுவிடுமோ என்ற நோக்கில், மணிப்பூரின் சிறுபான்மையினர் பகுதிகளில் இணைய முடக்கம், மின் வெட்டு ஆகியவையும் அரங்கேறின.

இவை ஒரு புறம் இருக்க, போராடும் பழங்குடியின மக்களில் பலர் இந்தியர்களே இல்லை என்றும், அவர்களுக்கு ST தகுதி தரக்கூடாது என்றும் புதிதாக கூவலிட்டு வருகின்றன மாநில மற்றும் ஒன்றிய பா.ஜ.க அரசுகள்.

இதற்கிடையில், மணிப்பூரில் பா.ஜ.க.வின் ஆட்சியை தக்கவைக்க, 6 மாதங்களுக்கு ஒரு சட்டமன்றத்தை கூட்டி வருகிறது மோடியின் மாநில அரசு.

இச்சட்டமன்ற கூட்டங்களில், சிறுபான்மை இனங்களின் நிகராளிகள் கலந்து கொள்ளாத போதும், சரமாரியாக சட்டங்களை இயற்றி வருகிறது பாசிச பா.ஜ.க.

அவற்றில் முக்கிய சட்டமாக, ஊர் பெயர் மாற்றும் மசோதா அமைந்துள்ளது. இதன் வழி, குகி மற்றும் சூமி இனத்தை சார்ந்த ஊர் பெயர்களை கலைந்து, மெய்தி இனத்தினருக்கான பெயர்களை சூட்ட திட்டமிட்டுள்ளது பா.ஜ.க.

இது போன்ற, வல்லாதிக்க அரசை எதிர்த்து, தனி நாடு கோரும் அளவிற்கு சிறுபான்மையின மக்களின் மனநிலை மாறியுள்ளது.

சொந்த மண்ணில் பல நூறு கிராமத்தினர் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டிருப்பதை ஆளும் பாஜக அரசு கண்டும் காணாமல் இருப்பது வியப்பல்ல.

ஆனால் சிறிது அச்சம் கூட இல்லாமல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வது தான் வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

மதவாத அரசியல் நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு மணிப்பூர் கலவரம் ஒரு முன்னுதாரணம்.

இத்தனை கொடுமைகளை செய்யும் பா.ஜ.க-விற்கு வடகிழக்கு மாநில மக்கள் சரியான பாடம் புகட்ட தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில், நம்பிக்கையின் ஒளியாக, இந்தியா கூட்டணியின் தலைமை கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதிப்பயணம், மணிப்பூரை தொடக்கப்புள்ளியாக வைத்து நகர்ந்தது.

அதுவரை, நம்பிக்கை இழந்து துவண்டிருந்த மக்கள், தமக்கொரு கூட்டம் உள்ளது என தலை நிமிர்ந்தனர். இதன் வழி, கடும் சிக்கலில் ஆட்கொண்டிருக்கும் மக்கள், விடுதலையடையும் நாள்கள் நெருங்கி கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையுடன் உறுதிபூண்டுள்ளனர்.

Also Read: சாதியவாத ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுமா? “அசாம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!