Politics

"பாஜகவின் எதிர்ப்பை மீறி, 4000 கி.மீ நடந்துள்ளேன்"- ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் ராகுல்காந்தி பேச்சு!

மணிப்பூரில் இருந்து மஹாராஷ்டிரா வரை ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நியாயப் பயணம் நேற்று மும்பை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள மகாத்மா காந்தியின் இல்லமான மணிபவனில் இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் இந்த பயணம் முடிவுக்கு வந்தது.

அதன்பின்னர் நேற்று இரவு நியாய யாத்திரையின் நிறைவு கூட்டம் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி , ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் போன்ற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தை முடக்க ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் முடக்கிவிடப்பட்டன. இதற்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. ஆனால் அனைத்தையும் மீறி இந்தியாவுக்காக 4 ஆயிரம் கி.மீ நடந்துள்ளேன். இந்த பயணத்தில் ராகுல் காந்தி மட்டும் நடக்கவில்லை, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் நடந்துள்ளது. நியாய யாத்திரையின் நோக்கம் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதுதான். ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் சமூக ஊடகங்கள் இருப்பதாக சொல்லப்பட்டதால் நான் மக்களை நேரடியாக சந்திப்பது என்று முடிவு செய்தேன்.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க அமலாக்கப்பிரிவும், சி.பி.ஐ.யும் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் பணியமாட்டோம். சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்களை மிரட்டி பாஜகவில் சேரும்படி நிர்ப்பந்தம் செய்கின்றனர். மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. பாஜக ED, CBI போன்ற அமைப்புகள் மூலம் எதிர்கட்சியினரை மிரட்டி வருகிறது. பாஜகவால் மிரட்டப்பட்ட மூத்த தலைவர் ஒருவர் என் அம்மாவிடம் அழுது, சிறைக்கு செல்லும் தைரியம் எனக்கு இல்லை என்று கூறினார். பாஜகவால் நாடு முழுவதும் இப்படி பல ஆயிரம் பேர் மிரட்டப்பட்டுள்ளனர்.

நமது நாடு மோசமான சூழ்நிலையை கடந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளது. ஓட்டு இயந்திரம், அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறை இல்லாமல் பா.ஜ.க-வால் வெற்றி பெற முடியாது. இன்றைக்கு ஓட்டு இயந்திரம் ரத்து செய்யப்பட்டால் மோடியால் வெற்றி பெற முடியாது"என்று கூறினார்.

Also Read: "தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களையும் SBI வங்கி வெளியிட வேண்டும்"- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !