Politics

பொது சிவில் சட்டம் : அத்தை மகன், மகள்களை திருமணம் செய்யத் தடை : தென்னிந்திய மரபை புறந்தள்ளிய பாஜக அரசு !

இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் அனைத்து மதம் மற்றும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பொதுவானதாக இருந்தாலும், சிவில் சட்டம் என்பது வெவ்வேறு மதங்களுக்கு வெவ்வேறாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் அனைவர்க்கும் பொதுவாக ஒரே சட்டம் இருக்கவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாள் இருந்து வருகிறது.

ஆனால், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியர் போன்றவர்களுக்கு அவர் அவர் மதத்தில் தனி தனி முறை இருப்பதால் பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அதிலும், இந்துக்கள் மத்தியில் கூட ஒரே சிவில் சட்டம் என்பது இந்தியாவில் நடைமுறையில் இல்லை.

பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு என அதில் பல்வேறு பிரிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு இடங்களில் இந்துக்களின் சில சமூகத்துக்கு பல்வேறு விளக்குகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொது சிவில் சட்டம் என்பது பல்வேறு சமூகங்கள் வாழும் இந்தியாவில் சாத்தியமற்றதாகவே பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஒரே நாடு, ஒரே மொழி என்ற வகையில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அந்த கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். அதனைத் தொடர்ந்து நாட்டிலேயே முதல் முறையாக பாஜக ஆளும் உத்தரகாண்டில் நேற்று பொது சிவில் சட்டம் சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பில் அத்தை-மாமா மகன் அல்லது மகள்களை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்டில் அரசு பொது சிவில் சட்டத்தின் கீழ் 74 உறவுமுறைகளை திருமணம் செய்ய தடை விதித்துள்ளது. அதில் ஒன்றாக அத்தை-மாமா மகன் அல்லது மகள்களை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அத்தை-மாமா மகன் அல்லது மகள்களை திருமணம் செய்வது பாரம்பரியமாக இருக்கும் நிலையில், வடமாநிலங்களிலும் பல்வேறு சமூகங்கள் இந்த பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர்.

இந்த சூழலில் உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது அங்கு வாழும் தென்னிந்திய சமூக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் பொருந்தாது என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

Also Read: நேற்று கர்நாடகா, இன்று கேரளா தமிழ்நாடு : ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் வெகுண்டெழுந்த மாநில அரசுகள்!