Politics

“பாஜக ஆட்சி வந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளது” - கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

மகாத்மா காந்தியின் 77 ஆவது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது இதனை ஒட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கும் தியாகிகளின் திருவுருப்பதற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது, “இந்திய தேசத்தைச் சேர்ந்த துரோகிகளால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். வன்முறையின் மீது நாட்டம் இல்லாத அதிகாரத்தின் மீது நாட்டம் இல்லாத சொத்துகளை துறந்தவர். கடவுளால் இதுபோன்ற ஒரு புனிதரை படைக்க முடியுமா என்று ஆச்சரியப்படக் கூடிய ஒரு மாமனிதரை, இழிவான பிறவிகள் அவரை சுட்டுக் கொன்றனர். மகாத்மா காந்தியை யாராலும் மறக்க முடியாத அளவு உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரர் அவர்.

ராமர் பக்கத்தில் நிற்க வேண்டும் என ஆசைப்படும் பிரதமர், மணிப்பூர் மக்களை சந்திக்கவில்லை. அவர் நிர்வாணப்படுத்தி நடத்திவரப்பட்ட இரண்டு பெண்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்க வேண்டாமா. இந்த தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட மாட்டேன் என பிரதமர் சொல்லி இருக்க வேண்டுமல்லவா. தேர்தலுக்குப் பிறகு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா கைது செய்யப்படுவார். இது நிச்சயமாக நடக்கும்.

2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று பிரதமர் கூறினார். கொடுத்தார்களா? விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார், செய்தாரா? பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கள்ளப் பணத்தை வெளியே கொண்டு வருவேன் என்று சொன்னார், நடந்ததா? மாறாக இருந்த பணம் இன்றைக்கு முதலாளிகளிடம் மீண்டும் சென்று விட்டது.

ஆட்சிக்கு வந்து என்ன செய்தோம் என்று சொல்லி ஓட்டு கேட்பதை விட்டுவிட்டு, நாங்கள் ராமருக்கு கோயில் திறந்து உள்ளோம் என கூறி வாக்கு கேட்கின்றனர். கோயில் கட்டியதால் நீங்கள் ஜெயிக்க முடியாது. கோயில் கட்டியவர்கள் எல்லாம் ஜெயித்ததாக வரலாறு கிடையாது. நீங்கள் செய்வது தவறு என்பதை நான்கு சங்கராச்சாரியார்களும் உணர்ந்து இருக்கின்றன. ஆகையால் தான் அவர்கள் நால்வரும் உங்களை எதிர்க்கின்றனர். ராமர் கோவில் கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைக்கின்றீர்கள். உங்கள் கனவு நிச்சயமாக பலிக்காது.

எந்த ஊரில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பலூன் விற்றாலும் கூட்டம் வரும். இது போன்ற தான் அயோத்தியில் கூட்டம் வந்திருக்கின்றது. ஏற்கனவே அயோத்தியில் 3200 ராமர் கோயில்கள் இருக்கின்றது. நீங்கள் கட்டியது 3201 அவ்வளவுதான். இது தவிர வேற எந்த சிறப்பும் கிடையாது.

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு எந்த சங்கராச்சாரர்களும் செல்லவில்லை. மன்னாதிபதிகளும் செல்லவில்லை. எந்தக் கோலும் எடுத்துச் செல்லப்படவில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஹிட்லர் எந்தவிதமான வன்முறையும் தந்திரத்தையும் கையாண்டாரோ, அதே போன்ற தந்திரத்தை பிரதமர் மோடி கையாண்டு வருகிறார். ஆகையால் தான் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் ராமர் கோவிலுக்கு செல்ல இருந்ததை வன்முறையின் மூலம் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

ராகுல் காந்தியை ஏன் கோயிலுக்கு அனுமதிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை அவர்கள் அளிக்க வேண்டும். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி 55 லட்சம் கோடி ரூபாய் தான் கடன் வைத்திருக்கின்றது. ஆனால் பாஜக ஆட்சி வந்து 9 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துள்ளார்கள்.

சென்னையில் பெருமழை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் எந்த இடத்தில் பெய்திருந்தாலும் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். மோடி அரசாங்கம் தோல்விகரமான அரசாங்கம் தேசத்திற்கு பாதகம் செய்கின்ற அரசாங்கம் இதுவரை அவர்கள் எந்த நன்மையும் செய்தது கிடையாது. ஆகையால் தான் அவர்கள் ராமரை பிடித்து அழுத்துகின்றனர். ராமர் நல்லவர்களுக்கு தான் உதவி செய்வார் தீயவர்களுக்கு உதவி செய்ய மாட்டார்.

ஆளுநர் ரவி தமிழகத்திற்கு வந்ததிலிருந்து இதுவரை தான் சொன்னதை தவறு என்று ஒப்புக் கொண்டது கிடையாது. இப்பொழுது தான் முதன்முறையாக தவறு என்று ஒப்புக் கொண்டிருக்கின்றார். இதுதான் காந்தியின் மகிமை. அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கள்ள தொடர்பு இருப்பதாகவே நினைக்கின்றோம். பாஜக கூட்டணியில் இருந்து அவர்கள் ஏன் விலகினார்கள்? என மக்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. ஆகவே பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் தொடர்பு இருப்பதாகவே நினைக்கின்றோம்.

பாஜக ஒரு மதவாத கட்சி; காங்கிரஸ் மதசார்பற்ற கட்சி. இந்தியவில் வாழ்கின்ற அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணமுடைய கட்சி காங்கிரஸ். ஆனால் ஒவ்வொரு மாநிலத்தவரையும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கும் பிரிவினைவாத எண்ணமுடையவர்கள் பாஜகவினர்” என்றார்.

Also Read: ”காந்தியாரைக் கொன்ற மதவாத அரசியல் சக்திகளை வீழ்த்துவோம்” : ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை!