Politics
“பாஜகவின் சேவகராக இருக்கிறார்...” - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் குறித்து சகோதரி கடும் விமர்சனம் !
ஆந்திர பிரதேச முதலமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, கடந்த 2021-ம் ஆண்டு YSR தெலங்கானா கட்சி என்ற ஒன்றை தொடங்கினார். சகோதரருக்கு எதிராக சில நேரங்களில் பிரசாரம் செய்து வந்தாலும், தெலுங்கானாவில்தான் பெரும்பாலும் இவரது ஆதாராளர்கள் உள்ளனர். இந்த சூழலில் இவர் கடந்த ஜனவரி 4-ம் தேதி காங்கிரஸ் கட்சியோடு தனது கட்சியையும் தன்னையும் இணைத்துக்கொண்டார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திர முதலமைச்சரின் சகோதரி காங்கிரஸில் இணைந்தது அம்மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் காங்கிரசில் இணைந்த சில நாட்களிலேயே ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் தனது சகோதரரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி பாஜகவின் கைப்பாவையாக இருப்பதாக YS ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார். ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீகாகுளம் பகுதியில் நேற்றைய முந்தினம் YS ஷர்மிளா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தனது கட்சி தொண்டர்களிடையே அவர் பேசியது பின்வருமாறு :
“எனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த YS ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட பாதையாத்திரை இச்சாபுரத்தில்தான் முடிந்தது. ஆந்திர மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டு, தனது பிரசாரத்தை மேற்கொண்டு, மக்களை கவர்ந்து முதலமைச்சரானார். அப்போது அவர் வீடுகள் இன்றி தவித்த ஏழைகளுக்கு சுமார் 46 லட்சம் வீடுகளை இலவசமாக கட்டிக் கொடுத்தார்.
இப்போது என்னுடைய அரசியல் பயணமும் இதே இச்சாபுரத்தில்தான் தொடங்குகிறது. எனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த YS ராஜசேகர ரெட்டி, தான் இறக்கும்வரை பாஜகவுக்கு எதிராகதான் இருந்தார். ஆனால் இப்போது ஆந்திராவின் நிலையை பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.
பாஜகவிற்கு இந்தியாவில் இருக்கும் சில கட்சிகள் ஆதரவாக இருக்கிறது. அதில் YSR காங்கிரஸ் கட்சியும் (ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி) ஒன்று. ஜெகன் மோகன் ஒரு கிறிஸ்துவராக இருந்தபோதும் கூட, மணிப்பூர் விவகாரத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. ஆந்திராவில் அவரது ஆட்சியில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்தே காணப்படுகிறது.
மணல், சாராயம், சுரங்க மாஃபியா என குற்றங்கள் அதிகரித்து வருவதோடு, ஆந்திர மாநிலமும் வளர்ச்சியின்றி ரூ.10 லட்சம் கோடி கடனில் தள்ளப்பட்டுள்ளது. எனது தந்தை YS ராஜசேகர ரெட்டி, தான் இறக்கும்வரை பாஜகவுக்கு பாஜவிற்கு எதிரியாகதான் இருந்தார். ஆனால் இப்போது ஜெகன் மோகன் பாஜகவின் கைப்பாவையாக, ஒரு சேவகராக இருந்து வருகிறார்.
எனினும் ஒரு முறை கூட ஜெகன் மோகன், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து பாஜகவிடம் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கண்டிப்பாக வரும். அதற்கான உறுதியை ராகுல்காந்தி அளித்துள்ளார். மக்களின் நலன் குறித்து ஆலோசிக்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே." என்றார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!