Politics

நடிகர்கள் முதல் மாணவர்கள் வரை... இணையத்தில் வைரலாகும் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை - பின்னணி என்ன ?

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு, தற்போது அங்கே இராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த இராமர் கோயிலின் திறப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள நிலையில், இந்த இராமர் கோயிலை ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு திறந்துள்ளது.

இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியலுக்காக பாஜக இராமர் கோயிலை திறப்பதாக கூறி புறக்கணித்துள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் இராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஆதரவு மற்றும் எதிர் கருத்துகள் பரவி வருகிறது.

இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி, “நமது நாடு இறையாண்மை, மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகம்” உள்ள நாடு என்பதை குறிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் இந்திய அரசின் ஜனநாயக தன்மையை வலியுறுத்தி, இந்திய மக்களுக்காக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது என்று தெளிவான கருத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இறையாண்மை, சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தேச ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தலைப்பில் சில வரிகள் உள்ளன. அதோடு அதில், இந்தியாவில் இருக்கும் யார் வேண்டுமானாலும் என்ன கடவுள்களை வேண்டுமானாலும் வழிபடும் உரிமையும் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வதி மட்டுமல்லாமல், மலையாள திரையுலகில் பிரபலமாக அறியப்படும் ரீமா கல்லிங்கல், திவ்யபிரபா, இயக்குநர்கள் ஜியோ பேபி, ஆஷிக் அபு, பாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் இதனை பதிவிட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் கனிமொழி எம்.பி., விசிக எம்.எல்.ஏ., ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்ட பலரும் இதனை பதிவிட்டுள்ளனர்.

அந்த வகையில் இன்று டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியலைப்பு சட்டத்தின் முகப்புரை மாணவர்கள் வாசித்தனர். மாணவர்கள், மாணவ அமைப்புகள் இதனை வாசித்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.