Politics

மணிப்பூரில் மதுவிலக்கு கொள்கை ரத்து: ஆட்சி பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் பாஜக அரசு அறிவிப்பு!

மணிப்பூரில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல் முறையாக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து அங்கு மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், பாஜக அரசின் ஆதரவோடு குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பல மாதங்களாக நடந்து வந்த வன்முறை தற்போது தான் குறையத்தொடங்கியுள்ளது.

இந்த சூழலில், மணிப்பூரில் 30 ஆண்டுகாலமாக நீடித்த மதுவிலக்கு கொள்கையை நீக்கி அங்கு மதுபானத்தை விற்பனை செய்ய முதல் முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. மணிப்பூரில் கடந்த 1991-ம் ஆண்டு மதுவிலக்கு கொள்கை முதல்முறையாக அமலுக்கு வந்தது.

அங்கு கடந்த ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் மதுபான கடைகளைத் திறக்க மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், தற்போது மணிப்பூரில் முழுமையாக மதுவிலக்கு கொள்கையை தளர்த்துவது என மணிப்பூர் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மேலும், மணிப்பூரில் மதுபானங்களை விற்பனை செய்ய அரசு நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சட்டவிரோத கள்ளச்சாராயம் அதிகரித்த காரணத்தால்தான் அங்கு மதுபான விற்பனையை சட்டமாக்க முடிவு செய்துள்ளதாக பாஜக அரசு தெரிவித்துள்ளது.

Also Read: “1.486 கோடி.. 24.25 லட்சம் குடும்பங்கள்” : ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கி மக்கள் துயர் நீக்கய முதலமைச்சர்!