
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். அவர் இந்த ஆண்டோடு தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால் அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்து வருகின்ற்னர்.

இந்த நிலையில், தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என நம்புகிறேன் என csk அணி பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "எனது தனிப்பட்ட பார்வையில் தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என நம்புகிறேன். ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அவர் முழு தகுதியுள்ளவராகும் வரை களத்தில் இருக்கவே தோனி விரும்புகிறார். எனவே அவர் தாற்போதைக்கு ஓய்வை அறிவிக்க மாட்டார் என தோன்றுகிறது.
பேட்டிங் ஆர்டரில் சற்று முன்பாகவே அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள் என எனக்குத் தெரியும். முழங்கால் அறுவை சிகிச்சையின் காரணமாகவே அவர் பின்வரிசையில் வருகிறார். ஆனால் வந்ததில் இருந்தே பந்தை அடித்து ஆடுவதில் தோனியை விட சிறந்தவர்கள் இல்லை"என்று கூறியுள்ளார்.








