Politics

“பொய்களை பரப்புவதற்கு பதிலாக, பதில் சொல்லுங்கள்..” - பட்டியலிட்டு அமித்ஷாவுக்கு கேள்வியெழுப்பிய தேஜஸ்வி!

இந்தியாவில் 1871-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து 1881-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1951-ம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், அதில் சாதிவாரி குறித்த எந்த விவரமும் எடுக்கப்படவில்லை.

1931-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை வைத்தே சாதி ரீதியான இட ஒதுக்கீடு வகைப்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையிலிருந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலகட்டமான கடந்த 2011-ம் ஆண்டு நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டன.

ஆனால் அதன்பிறகு 2014-ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜக ஆட்சியமைத்த பிறகு அதனை வெளியிடவில்லை.இதற்கிடையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனினும் பாஜக அதுகுறித்து எந்த கருத்தும் கூறாமல் இருந்து வருகிறது.

இதனிடையே காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் பீகார் மாநிலத்தில், கடந்த மாதம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக ஒருபோதும் எதிர்க்கவில்லை என்று கூறினார். அதோடு பீகாரில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பில் யாதவ் மற்றும் இஸ்லாமிய சமூக மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், மற்ற சமூக மக்களின் கணக்கை குறைத்தும் காட்டியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் அமித்ஷாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்து தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு :

“பொய்களையும் குழப்பத்தையும் பரப்புவதற்கு பதிலாக, தயவுசெய்து இதற்கு பதில் சொல்லுங்கள் அமித்ஷா ஜி,

1. பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்புத் தகவல்கள் தவறாக இருந்தால், ஒன்றிய அரசு நாடு முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் தரவுகளை வெளியிடாதது ஏன்?

2. பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவில்லை?

3. ஒன்றிய அரசில் எத்தனை கேபினட் அமைச்சர்கள் 𝐎𝐁𝐂 / 𝐒𝐂 / 𝐒𝐓 பிரிவை சேர்ந்தவர்கள், எத்தனை பேர் 𝐎𝐁𝐂 / 𝐒𝐂 / 𝐒𝐓 பிரிவை சேராதவர்கள். பட்டியலை வெளியிடவும். அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு முக்கியமில்லாத துறைகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளன?

4. 𝐎𝐁𝐂 / 𝐒𝐂 / 𝐒𝐓 பிரிவை சேர்ந்த பாஜக முதல்வர்கள் எத்தனை பேர் உள்ளனர்? பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்படாத முதலமைச்சர்களின் ஒப்பீட்டு சதவீதத்தைச் சொல்லுங்கள்.

5. ஒன்றிய கேபினட் அமைச்சர்களில் பீகாரில் இருந்து எத்தனை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளனர்? பூஜ்ஜியம் என்பது 𝟎 ?

- இந்த கேள்விகளுக்கு பதில் சொன்னால், உங்களுடன் சேர்ந்து, 𝟖𝟓% பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் இந்து மக்களின் கண்களும் திறக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: பார்ட்டிகளில் பாம்பு விஷம்: தலைமறைவு குற்றவாளியை பிடித்த கோட்டா போலீஸ் - நொய்டா போலிஸார் விடுவித்தது ஏன்?