Politics

"பாஜக கூட்டணி வேண்டாம், கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்" - தேவகவுடாவுக்கு கட்சியின் மாநில தலைவர் கோரிக்கை!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி என பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக அறிவித்தனர். முதலில் இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மறுத்தாலும் பின்னர் அதனை ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில துணைதலைவர் சையத் சபிவுல்லா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஷாஹீத்தும் அக்கட்சியில் இருந்து விளங்குவதாக அறிவித்தார். இப்படி முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மாட்டோம். 'INDIA' கூட்டணிக்குதான் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி ஆதரவு தெரிவிக்கும். எங்களுடையது தான் உண்மையான மதச்சார்பற்ற ஜனதா தளம் என அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் இப்ராஹிம் அறிவித்தார். இவரின் இந்த கருத்து கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் இப்ராஹிமை கட்சியில் இருந்து நீக்குவதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா அறிவித்தார். மேலும் கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவராக தனது மகன் குமாரசாமியை நியமிப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், தேவகவுடாவால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாது என இப்ராஹிம் அறிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின்விதிப்படி, முதலில் எனக்கு நோட்டீஸ் கொடுத்து, கட்சிக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துதான் என்னை நீக்க முடியும். அதைவிட்டு தேவகவுடாவால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாது.

அடுத்ததாக உயர் நீதிமன்றத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்று இதற்குத் தடை வாங்குவோம். கேரளா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலுள்ள ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு, அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பேன். பாஜக சித்தாந்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம். கூட்டணி குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு தேவகவுடாவிடம் நான் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: 9 ஆண்டில் ரூ.25 லட்சம் கோடி ஸ்வாஹா: கிழிந்து தொங்குகிறது மோடி அரசின் முகமூடி - சு.வெங்கடேசன் MP ஆவேசம்!