Politics

வாரி வழங்கியும் ஒரு பதக்கம் கூட வெல்லாத குஜராத்: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பரிதாபம்- முழு விவரம் என்ன?

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கிய இந்த போட்டிகள் இன்று முடிவடைய உள்ளது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த தொடர் இந்தியாவுக்கு மிகப்பெரும் வெற்றிகரமான தொடராக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-ல் ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலத்துடன் 70 பதக்கங்கள் வென்றிருந்தது. அதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என 57 பதக்கங்களை வென்றிருந்தது.

ஆனால், இந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் முதல்முறையாக 100 பதக்கங்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த தொடரில் பதக்கம் வென்ற இந்தியர்களின் விவரம் மாநில வாரியாக வெளிவந்துள்ளது

ஹரியானா: 44

பஞ்சாப்: 32

மகாராஷ்டிரா: 31

உத்திரப் பிரதேசம்: 21

தமிழ்நாடு: 17

மேற்கு வங்கம்: 13

ராஜஸ்தான்: 13

மிசோரம்: 01

குஜராத்: 00

இந்த பட்டியலில் குஜராத்தை சேர்ந்த வீரர்கள் ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில், அந்த மாநிலத்துக்கு விளையாட்டு துறையின் கீழ் அதிக நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியதை தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர்.

விளையாட்டு துறைக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி :

குஜராத்: 608 கோடி

ஹரியானா: 88.89 கோடி

பஞ்சாப்: 93.71 கோடி

மகாராஷ்டிரா: 110.8 கோடி

உத்தர பிரதேசம்: 503.02 கோடி

தமிழ்நாடு: 33 கோடி

மேற்கு வங்கம்: 26.77 கோடி

ராஜஸ்தான்: 112.26 கோடி

மிசோரம்: 39 கோடி

ஏற்கனவே ஒன்றிய அரசின் நிதிகளில் அதிகளவிலான நிதி குஜராத்துக்கு ஒதுக்கப்படுவதாகவும், முக்கிய பதவிகளில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. அந்த வகையில் விளையாட்டு துறைக்காக ஒன்றிய அரசு பிற மாநிலங்களை விட குஜராத்துக்கு அதிக தொகை ஒதுக்கியுள்ளது. ஆனால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூட வெற்றிபெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி குஜராத் விளையாட்டு கட்டமைப்புக்கு ஒதுக்கப்படவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Also Read: கோலி, கோலி என அதிர்ந்த அரங்கம்: ஆப்கான் வீரரை கிண்டல் செய்த ரசிகர்கள்: கோலி செய்த செயலால் நெகிழ்ச்சி !