Politics

ரத்தத்தால் மூழ்கடிக்கப்படும் புனித பூமி : இஸ்ரேல் -பாலஸ்தீன் பிரச்சினையின் வரலாற்று பின்னணி என்ன ?

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு தாக்குதலில் இவ்வளவு பேர் பலி, இஸ்ரேல், பாலஸ்தீன் மீது நடத்திய தாக்குதலில் இவ்வளவு பேர் பலி என்பது எல்லாம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நாம் கேட்டுவரும் செய்திகள்தான். இந்த போராட்டம் சண்டை என்பது இன்று, நேற்று தொடங்கியது அல்ல; நாளை முடியப்போவதும் அல்ல.

ஆனால், இந்த மோதலைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்த மண்ணின் வரலாறு குறித்தும், மக்களின் வாழ்வு குறித்தும், பாலஸ்தீன் நாட்டின் பின்னணி குறித்தும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வரலாற்றின் பக்கங்களில் பாலஸ்தீன் என்றும் இஸ்ரேல் என்றும் அறியப்படும் இந்த பகுதியின் வரலாறு என்பது உலகின் முக்கியமானது மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் தாக்கல் செலுத்தக்கூடியது. யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற 3 மதங்களின் புனிதத்தளம் என்பதால் வரலாறு முழுக்க எண்ணற்ற போர்களையும், பேரழிவுகளையும் சந்தித்த இடம் அது.

வரலாற்று தகவல்களின் படி முதலில் அந்த பகுதியில் வாழ்ந்த பூர்வீக மக்களை அங்கிருந்து விரட்டி அடித்து இஸ்ரேலிய மக்கள் அங்கு குடியேறினர். பின்னர் அந்த பகுதி முழுக்க இஸ்ரேலிய மக்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அதனைத் தொடர்ந்து அசிரியர், பாபிலோனியர், பெர்சியர், கிரேக்கர், ரோமர் என பண்டைய பேரரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த பகுதி சில காலங்கள் இருந்தது.

israel rebellion against romans

கி.பி 70-ம் ஆண்டில் இஸ்ரேல் பகுதியில் இருந்த யூதர்கள் அந்த பகுதியை அப்போது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரோமர்களை எதிர்த்து புரட்சி செய்தனர். இந்த புரட்சி மிகக்கொடூரமாக ஒடுக்கப்பட்டதுடன், ஏராளமான யூதர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து கி.பி 132-ம் ஆண்டில் மீண்டும் யூதர்கள் ரோமர்களை எதிர்த்து புரட்சி செய்ய, இந்த முறையும் புரட்சி ஒடுக்கப்பட்டு மிச்சம் இருந்த யூதர்களும் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.

அப்படி நாடு கடத்தப்பட்ட ஏராளமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வாழத்தொடங்கினர். இந்த நிலையில், அரபியர்கள், இஸ்ரேல் என்று அழைக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையினர் ஆகி அடுத்த 2000 ஆண்டுகள் அந்த மண்ணின் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர்.

இந்த காலகட்டத்தில் கிறிஸ்தவ மதம் உலகமெங்கும் பரவியது. ரோம மன்னர்களும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள, இயேசு பிறந்ததாக அறியப்பட்ட பாலஸ்தீன் பகுதியும் அதன் தலைநகராக இருந்த ஜெருசலேமும் புனித இடமாகியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் அந்த பகுதி ரோமர்கள் கட்டுப்பாட்டிலும், அதன்பின் வந்த பைசாண்டிய பேரரசின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

crusades war (சிலுவைப் போர்கள் )

இதனிடையே கி.பி 636-ம் ஆண்டு இஸ்லாமிய கலீபாக்கள் பாலஸ்தீன் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அதன் பின்னர் அடுத்த பல ஆண்டுகள் அந்த பகுதி இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வசமே இருந்தது. பின்னர் கி.பி 1101-ம் ஆண்டில் இருந்து 1271 -72 வரை சிலுவைப்போர் வீரர்களின் தாக்குதலுக்கு பலமுறை ஆளாகி சில ஆண்டுகள் அவர்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இறுதியாக 1516-ம் ஆண்டு துருக்கிய ஒட்டாமான் பேரரசு கட்டுப்பாட்டின் கீழ் பாலஸ்தீன் வந்தது.

மத்திய கால பகுதியில் நடந்த இந்த ஏராளமான போர்களின் போது அதில் பங்கேற்று அழிந்தவர்கள், அந்த மண்ணை காப்பாற்றியவர்கள் எல்லாம் அங்கிருந்த அரபியர்கள்தான். இந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் குடியேறியிருந்த யூதர்கள் முதலில் அங்கு பெரும் இன்னல்களுக்கு ஆளானாலும் (ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை, என்பதால் அங்கு இயேசுவை கொன்றவர்கள் என யூதர்கள் தாக்கப்பட்டனர்) பிற்காலத்தில் அங்கு அரசியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் யூதர்கள் உச்சத்துக்கு சென்றனர். 1874-ம் ஆண்டு பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற யூதர், பிரிட்டனின் பிரதமராகவே உயரும் அளவு யூத சமூகம் அங்கு செல்வாக்கோடு திகழ்ந்தது.

இதன் காரணமாக அவர்களுக்கு மீண்டும் பாலஸ்தீனில் யூதர்களுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதற்காக சில சிறிய யூத குழுக்கள் 15-ம் நூற்றாண்டில் இருந்து பாலஸ்தீனியத்தில் குடியேறினர். அதன் பின்னர் 18-ம் நூற்றாண்டில் 'சியோனிசம்' (Zionism) என்ற பெயரில் இதற்கு என தனி அமைப்பு தொடங்கப்பட்டு ஐரோப்பாவில் இருந்த ஏராளமான யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு இடம் பெயர்ந்தனர். அப்படி பாலஸ்தீனுக்கு வரும் யூதர்களுக்கு நிலம், வீடு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வதற்கு என்றே யூதர்களால் நிலவங்கி என்ற அமைப்பே பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தப்பட்டது.

Ottoman Empire

நவீன கால பாலஸ்தீன் வரலாறு என்பது முதலாம் உலகப்போர் காலத்தில் இருந்தே தொடங்குகிறது. அந்த போரில் பாலஸ்தீனத்தை அப்போது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒட்டமானிய பேரரசு, போரில் பிரிட்டன், பிரான்ஸ் இருந்த அணிக்கு எதிராக ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்தது. ஆனால், அந்த போரில் ஜெர்மனி தோல்வியை சந்திக்க அதனுடன் கூட்டணி வைத்திருந்த ஒட்டமானிய பேரரசும் தோல்வியைத் தழுவியது.

முதலாம் உலகப்போரின்போது பாலஸ்தீனத்தை அரேபியர்கள் உதவியோடு பிரிட்டன் கைப்பற்றியது. பிரிட்டனின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பாலஸ்தீன் வந்ததும் அங்கு யூத குடியேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது. முதலாம் உலகப்போரில் பிரிட்டனுக்கு யூதர்கள் ஏராளமான அளவு பொருளுதவி செய்ததால் அவர்கள் பதிலுதவியாக பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனி நாடு என்ற வேண்டும் கோரிக்கையை எழுப்பினர்.

இதற்கு விரைவில் பிரிட்டன் ஒப்புதல் அளித்தது. 1917-ம் ஆண்டு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பால்போர் வெளியிட்ட 'பால்போர் பிரகடனம்' பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு என்று தனி நாட்டை உருவாக்குவதை பிரிட்டன் ஆதரிப்பதாக தெளிவுபடுத்தியது. இந்த அறிக்கை பாலஸ்தீனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தில் அரேபியர்களுக்கும் - யூதர்களுக்கும் இடையே மோதல்களும் அதிகரித்தன.

The Balfour Declaration of 1917

இந்த சூழலில் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வர அங்கு யூதர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்தது. மேலும், அவர் இரண்டாம் உலகப்போரை தொடங்கி போலந்து, ஆஸ்திரியா, செக்கோஸ்லாவியா என தொடர்ந்து பல்வேறு நாடுகளை கைப்பற்ற, அங்கிருந்த தப்பிய யூதர்கள் அடைக்கலமாகும் ஒரே இடமாக பாலஸ்தீன் மாறியது. ஒரு வழியாக இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்தபோது ஐரோப்பாவில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட செய்தி உலகையே உலுக்கியிருந்தது.

இதனால் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு என தனி நாடு உருவாக உலகமே ஆதரவு தெரிவித்தது போன்ற சூழல் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு என தனி நாட்டை உருவாக்கும் பொறுப்பை ஐ.நா அமைப்பிடம் ஒப்படைத்தது. அதன்படி ஐ.நா பாலஸ்தீனத்தை மூன்றாகப் பிரித்து அதில் பெரும்பாலான இடத்தை யூதர்களுக்கு ஒப்படைத்து மீதம் இருந்த இடத்தை பாலஸ்தீனியர்களுக்கு அளித்தது. அதே நேரம் ஜெருசலேமை சுற்றியிருந்த பகுதிகள் ஐ.நா மேற்பார்வையில் இயங்கும் என்றும் ஐ.நா அறிவித்தது. இதற்கான வாக்கெடுப்பு பெருவாரியான நாடுகளின் ஆதரவோடு ஐ.நாவிலும் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து 13 மே 1948-ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்காமல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் போர் அறிவிப்பை வெளியிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இதர அரேபிய நாடுகளான எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், இராக் போன்ற நாடுகளும் தங்கள் படைகளை அனுப்பியது.

palestine map

சுமார் 9 மாதங்கள் நடைபெற்ற இந்த போரில் இஸ்ரேலிய படைகள் வெற்றிபெற்று பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்தன. அதே நேரம் எகிப்து காசாவை தனது நாட்டோடு இணைத்துக்கொண்டது. ஜோர்தான் மேற்கு கரை பகுதியை ஆக்கிரமித்தது. ஐ.நா கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலேம் நகரை இஸ்ரேலும், ஜோர்தானும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டன. இப்படி ஐ.நா-வால் பிரித்துக்கொடுக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளை இஸ்ரேல் பிடித்துகொள்ள, பாலஸ்தீனத்துக்கு உதவியாக வந்த எகிப்து , ஜோர்தான் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தின் எஞ்சிய பகுதிகளை தங்களுக்குள் பங்குபோட்டு கொண்டனர். இப்படியாக பல நூற்றாண்டுகள் நீடித்த பாலஸ்தீன் என்ற நாடே சரித்திரத்தில் இருந்து காணாமல் போனது.

இந்த போரினைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனியர்கள் போராளி அமைப்புகளைத் தொடங்கி, அதன் மூலம் இஸ்ரேலுடன் தொடர்ந்து சண்டையிட்டனர். யாசிர் அரஃபாத் தலைமையில் PLO அமைப்பினர் நடத்திய தாக்குதல், காசா பகுதியில் ஹமாஸின் எழுச்சி எல்லாம் ரத்த சரித்திரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள்.

Also Read: கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023: கின்னஸ் சாதனை.. 9 பிரிவுகளில் ரூ.10 லட்சத்தில் 27 பரிசுகள்!