Politics
“அன்று ராம்நாத் கோவிந்த்.. இன்று திரெளபதி முர்மு..” - ஒன்றிய பாஜக அரசை வறுத்தெடுத்த மல்லிகார்ஜுன கார்கே !
ராஜஸ்தான் மாநிலத்தின் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கிருக்கும் ஆளுங்கட்சியான காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்திலும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவராக சரோஜினி நாயுடு இருந்தார். ஆனால் 100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளாரா? என்று பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேடையில் பேசியதாவது, "தற்போது புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. அப்போது இந்த மசோதாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அன்று அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போனது. ஆனால் இப்போது இந்த மசோதாவை பாஜகவே தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டதால் பாஜகவினர் ஹீரோக்களாக தெரிவதாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்போது இந்த மசோதாவை தேர்தல் காரணமாகவே அறிவித்துள்ளனர். அவர்களுக்கு இதுகுறித்த கொள்கையோ தெளிவோ கிடையாது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளபோதிலும், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்த பெண்களுக்கு மசோதாவில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது. அடுத்த ஆண்டு நாங்கள் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
இந்த மசோதா நிறைவேற்றும்பொதும், குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோது, அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், தீண்டத்தகாதவர் என்பதால்.
அதேபோல அந்தக் கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவரால்தான் மக்களவை கூட்டப்படுகிறது. பிரதமரால் அல்ல. ஆனால் குடியரசுத் தலைவரை புறக்கணித்துவிட்டு, பெண்களை பெரிதும் மதிப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். உண்மையில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவராக சரோஜினி நாயுடு இருந்தார். ஆனால் 100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளாரா? அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான், மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!