Politics

ஆசிய விளையாட்டு போட்டி: அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா வழங்க மறுத்த சீனா.. இந்தியா பதிலடி !

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த விளையாட்டு திருவிழாவில் சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் முன்னரே தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், ஆசியாவின் பிரமாண்டமான விழாவான இதன் தொடக்க விழா இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு சீனா விசா வழங்கமறுத்த காரணத்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அனுராக் தாக்கூரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Anurag thakur

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்குபெற இந்திய அணியில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வூஷூ நைமன் வாங்சு, ஒனிலு தேகா, மேபங் லாம்கு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இவர்கள் போட்டியில் பங்கேற்க செய்யவிடலாம் இந்த 3 பேருக்கும் விசா வழங்க சீனா மறுத்துள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்வதாக இருந்த இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலபிரதேசத்தை சீனா நீண்ட நாட்களாக உரிமை கொண்டாடி வருகிறது. அதன் காரணமாக அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.