Politics
“இது என்ன புராணங்களை பற்றிய விவாதமா? அதானி சக்தி என பெயர் வைப்பீர்களா?” - நாடாளுமன்றத்தில் சீறிய சு.வெ !
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது. தற்போது புதிய நாடாளுமன்றத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய முந்தினம் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று மக்களவையில் 454 பேர் ஆதரவோடு நிறைவேறியது.
எனினும் இந்த மசோதா அரசியல் ஆதாயத்தை தேடும் நோக்கத்தோடு பாஜக அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. இதில் இருக்கும் சில சிக்கல்களால் இந்த மசோதா அமளிப்படுத்துவது சாத்தியமல்ல என்றும் கூறி வருகிறது. இந்த சூழலில் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற கூட்டதொடர் நடைபெற்றது. அப்போது சந்திரயான் 3 வெற்றிக்கான பாராட்டு உரை நாடைபெற்றது. இதில் பேசிய சு.வெ., பாஜக எம்.பி-க்கள் புராண இதிகாசங்களையும், விஞ்ஞானத்தையும் ஒப்பிட்டு பேசியது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, சந்திரயான் 3 வெற்றிக்கான காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை தீர்மானித்து நிலவின் வழித்தடத்தை துல்லியமாக கணித்து இறங்கியது தொழில்நுட்ப துறையில் நம்முடைய பாய்ச்சல் வேகம் முன்னேற்றத்தினுடைய ஒரு சான்று.
இந்த அவையில் காலையில் இருந்து நடந்தது விஞ்ஞானத்தைப் பற்றிய விவாதமா அல்லது வேத புராணங்களை பற்றியதா? அமைச்சர் புராண இதிகாச கதைகளை நீண்ட நேரம் பேசினார் அதை கேட்பதற்கு நாடாளுமன்றத்திற்கு வரவேண்டிதில்லை. விக்ரம்லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு “சிவசக்தி” என்று பெயர் வைத்த நமது பிரதமர், எஸ் எஸ் எல் வி யை தனியாருக்கு கொடுக்கிற இந்த மிஷனுக்கு “அதானி சக்தி” என்று பெயர் வைப்பாரா?
ஒரு கோவில் மடத்திலே அமர்ந்தால் நல்ல கதாகாலட்சேபத்தை கேட்டிருக்க முடியும். கேள்வி நேரத்தை தவிர்த்துவிட்டு புராணங்களை வரலாறு என்றும், இதிகாசங்களை அறிவியல் என்றும் மீண்டும் மீண்டும் நீங்கள் நிலைநிறுத்த நினைக்கிறீர்கள். எப்படி ஒரு ராக்கெட் செல்லும்போது அது உதிர்த்து கீழே தள்ளுகிற கரி புகைகளை போல உங்கள் பொய்யும் கதைகளும் கீழே விழுந்து இந்தியா வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் முன்னோக்கி செல்லும்." என்றார்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !