Politics

”ஒன்றிய அரசின் உத்தரவுபடி எதிர்கட்சி தலைவர்களை வேட்டையாடும் அமலாக்கத்துறை”.. ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் உள்ளார்.

இந்த மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக முன்னாள் முதல்வரும் பாஜக சேர்ந்த ரகுபர்தாஸ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் கடந்த 6 மாதங்களில் 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதனை ரத்துசெய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் அமலாக்கத்துறை மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புகிறது. இது சட்ட விரோதமானது. அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல். தொடர்ந்து அவமானப் படுத்தவும், மிரட்டும் வகையிலும் சம்மன்கள் அனுப்பப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா கூட்டணி என்கிற பெயரில் எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. இதனால் எதிர்கட்சிகள் குறிவைக்கப்படுகின்றன. ஒன்றிய அரசின் உத்தரவின் படி முக்கிய எதிர்கட்சி தலைவர்களை வேட்டையாடும் வகையில் அமலாக்கத்துறை செயல்படுகிறது. இதன் மூலம் நாட்டின் அரசியல் சூழலை ஆட்சியாளர்கள் சீர்குலைத்துள்ளனர். அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி எதிர்கட்சிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்தவே சம்மன் அனுப்பப்படுகிறது. சரியாக இந்தியா கூட்டணி கூட்டம் மும்பையில் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் நாளன்று சம்மன் அனுப்பப்பட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

Also Read: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் காங்கிரஸ்.. சமீபத்திய கருத்து கணிப்பில் தகவல்