Politics

ராணுவ வீரர்கள் மறைவு.. வருத்தம் தெரிவிக்காமல் பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மோடி.. காங்கிரஸ் விமர்சனம் !

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு, கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே நேரம் ரஷ்யா அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் கலந்துகொள்ளாமல் தங்கள் பிரநிதிகளை அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் அனைவரின் ஒப்புதலோடு கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதாக பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் பாஜ தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிதாமற் மோடிக்கு பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதே நாளில், காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள கரோலி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ராணுவ கர்னல் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். எனினும் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி பாஜக நிகழ்ச்சியில் மகிழ்ச்சிபொங்க கலந்துகொண்டார்.

இதனைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்துள்ளது.மோடியின் இந்த செயலைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா தனது X தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், "காஷ்மீரில், நமது ராணுவ வீரர்கள் 3 பேர் மரணம் அடைந்த துயர செய்தி கிடைத்த போதிலும், பேரரசர் மோடிக்காக பாஜக தலைமை அலுவலகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் எது நடந்தாலும் பரவாயில்லை, தான் பாராட்டப்படும் நிகழ்ச்சியை மட்டும் மோடியால் ஒத்தி வைக்க முடியாது"என விமர்சித்துள்ளார்.

Also Read: "இனி யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுகு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு பெண்கள் !