Politics

சந்திரபாபு நாயுடு கைது.. நடு ரோட்டில் படுத்து நடிகர் பவன் கல்யாண் ஆர்பாட்டம்.. பிறகு நடந்தது என்ன ?

ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார். இதனால் ஆந்திராவே மிகவும் களேபரத்தில் காணப்பட்டது. இந்த காரணத்தினால் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் வாகனங்கள் எதுவும் ஆந்திராவுக்கு செல்லவில்லை.

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் மேம்பாட்டு துறையில் ரூ.550 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக கூறி, நேற்று காலையிலேயே போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்கள் பாதிக்கப்பட்டதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு மீது ஏபிசி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியும் அளித்துள்ளது.

மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறவுள்ளது. இதனிடையே சந்திரபாபு நாயுடுவின் கைது செய்தியை கேட்டதும் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பதற்காக பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து, சிறப்பு விமானத்தில் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்திற்கு செல்ல முனைந்தார். ஆனால் கலவரம் ஏற்படும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அம்மாநில போலீசாரால் பவன் கல்யாண் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த பவன் கல்யாண், தனது எதிர்ப்பை காட்டும் விதமாக சாலையிலேயே படுத்து வலுத்த கண்டனங்களை தெரிவித்தார். மேலும் போலீசார் அவரை சமாதானம் செய்ய முயன்றும் அது பலனளிக்காமல் போனது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் வேறு வழியின்றி பவன் கல்யாணம் கைது செய்யப்பட்டார்.

இதனால் ஜனசேனா கட்சி தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் பவன் கல்யாண் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நி்லையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read: முடிவுக்கு வந்த ஜி-20 மாநாடு.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன? அடுத்த தலைமைப் பொறுப்பு யாருக்கு?