Politics

‘சுயமோட்டோ’.. சிந்துபாத் கதைபோல முடிவற்றதாகக் கிளம்பும்: நீதிமன்றம் தவறான முன்னுதாரணமாகக் கூடாது: சிலந்தி

தமிழ்நாட்டு கீழமை நீதி­மன்றங்களில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை தானாக முன்வந்து மேல்முறையீடாக; அதாவது ‘சுயமோட்டா’­ வாக ஒரு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எடுத்து வருவது தொடர்கதையாகிறது. அமைச்சர் பொன்முடி, பின்னர் தங்கம்தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி என ‘சுயமோட்டோ’ வழக்குகளின் நீட்சி நித்தம் பெருக்கெடுக்கிறது!

மேலே குறிப்பிட்டுள்ள வழக்குகள் எல்லாமே கீழமை நீதிமன்றங்கள் மாதக்கணக்கில் நடத்தி, பல தரப்பட்ட சாட்சியங்களை விசாரித்து, முடிவு எடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டவை! இவை அனைத்துமே ஒரே நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகள் அல்ல; பல்வேறு மாவட்டங்களில் பல நீதிமன்றங்களில் நடைபெற்றவை. இப்போது மேலே குறிப்பிட்டவர்கள் பெயரில் தொடுக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அந்தந்த நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்களது வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி மேல்முறையீடாக தானே முன்வந்து எடுப்பது; கீழமை நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளின் நேர்மைத் தன்மையையும் அவர்களது சுயமரியாதையையும் கேள்விக்கும், கேலிக்கும் உட்படுத்துவதாகவே பலரால் கருதப்படுகிறது!

அந்த உயர்நீதிமன்ற நீதிபதி அவருக்குரிய வரம்புக்குள் செயல்படுவதாக அவர் கருதினாலும், அவரது நடவடிக்கைகள் கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் பலரது சுயமரியாதை உணர்வை சுட்டெரிப்பதாக உள்ளது!.

அமைச்சர் பொன்முடியின் விவகாரத்தில், தனக்கு நிகராக உள்ள நீதிபதிகள் இருவர் பரிந்துரையுடனும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடனும் எடுத்த நிர்வாக முடிவை, அதாவது வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூருக்கு மாற்றிய முடிவையும் விமர்சனப்பார்வைக்கு உட்படுத்தினார்; அந்த நீதிபதி! இதுபோன்று அந்த நீதிபதி தொடர்ந்து தெரிவிக்கும் கருத்துகள், செயல்பாடுகள். மற்றைய நீதிபதிகள் மனதினை எத்தனை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதை அவர் உணர்ந்து செயல்படுகிறாரா என்பது புரியவில்லை. அந்த சக நீதிபதிகள் மற்றும் கீழமை நீதிபதிகள் நீதிமன்றங்களின் மாண்பைப் பாதுகாத்திடும் நோக்கில் தங்களது மனப்புழுக்கத்தை தற்போது மனதிற்குள் போட்டு அடைத்து வைத்திருக்கலாம்; நிலைமைகள் இப்படியே தொடர்ந்தால், ஒருநாள் திடீரென அவர்கள் வெடிக்கக் கூடும்! அப்படி எல்லாம் நிகழாது என்று எண்ணி தன்னைத்தானே யாரும் ஏமாற்றிக்கொள்ளக்கூடாது! அப்படி நடைபெற்றதுக்கு உதாரணம் உண்டு! ‘பொறுமைக்கும் எல்லை உண்டு’ என்ற நிலையில், கடந்த 2018–ஆம் ஆண்டு டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நால்வர் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்து அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக புகார்கள் கூறினர்.

அது ஒரு அசாதாரண நிகழ்வாகவே கருதப்பட்டது. உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி குறித்து அவர்கள் விமர்சிக்கும்போது கூறிய கருத்துகள். இப்போது தனது சக நீதிபதிகளையும், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை இன்று விமர்சிக்கும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்! ‘’சம அந்தஸ்து உடைய நீதிபதிகளில் முதன்மையானவர் தான் தலைமை நீதிபதி; அதைத் தவிர எதுவும் அதிகமான நிலையோ, குறைவான நிலையோ இல்லை என்பதை சட்ட இயல் (Jurisprudence) தெளிவாகத் தெரிவித்துள்ளது என்பதை அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவாகக் கூறியுள்ளனர். ‘’It is too well settled in the Jurisprudence of this Country the Chief Justice is only first amongst the equals nothing more or nothing less’’

– மேற்கண்டவாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையே விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளனர்!

இந்த நிலையில், நமது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சக நீதிபதிகளை யும் கீழமை நீதிபதிகளையும் விமர்சிப்பதை தங்களது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று அந்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினால் அது நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதறடித்து விடாதா?

நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள், அது உச்சநீதிமன்றமாக இருந்தாலும் சரி, உயர்நீதிமன்றமாக இருந்தாலும் சரி, ஏன்; கீழமை நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி; அவை அனைத்தும் சாட்சியங்கள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் வாதங்களின் அடிப்படையில் அமைந்துவிடுகின்றன! தீர்ப்புகளில் திருப்தி கொள்ளாதவர்கள் பரிகாரம் தேடிட மேல்முறையீட்டுக்கு பல வாய்ப்புகள் உள்ளன! பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேஷன், ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன்; ரெவ்யூ பெட்டிஷன், கியூரேட்டிவ் பெட்டிஷன் என பல முறையீடு களுக்கு வழிவகைகள் உள்ளன. இந்த நிலையில் ‘சுயமோட்டோ’ வழக்கு என்பது, தங்களது பாதிப்புகளுக்கு நிவாரணம் தேட இயலாதவர்களுக்கு நீதிமன்றங்களே முன்வந்து நிவாரணமளிக்க உதவிடும் வகையில்தான் பொதுவாக இதுவரை இருந்துள்­து. இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் தேடி, அதன்மூலம் கிடைத்த இடத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகவே சட்ட நிபுணர்கள் பலரும் கருதுகின்றனர்!

கீழமை நீதிமன்றங்களில் பல ஆண்டு காலமாக, சாட்சியங்கள் சரியில்லா; அவர்கள் ஒத்துழைப்பு இல்லா சூழலிலோ பிறழ்சாட்சியங்களாக மாறிய நிலையிலோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றங்களால் விடுதலையான நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன! மறைந்த அம்மையார் ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட பல வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் அவரை விடுவித்துள்ளன என்பதும், இன்று சுயமோட்டோ வழக்காக பல கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினை மேல்முறையீடாக எடுத்திடும் நீதிபதிக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை, இருந்தும் ஏன் அந்த உயர்நீதிமன்ற நீதிபதி சகட்டுமேனியாக கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய பல ஆண்டுகளுக்கு முன் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீட்டுக்கு எடுக்கிறார் என்பதை பலரும் பல கோணங்களில் நோக்குவது, அதனை நீடிக்கவிடுவது, நீதித்துறைக்கு நல்லதல்ல!

இப்போது ‘சுயமோட்டோ’ மேல்முறையீடு வழக்காக, பல கீழமை நீதிமன்ற நீதிபதிகள் எடுத்த முடிவை விசாரிக்க முற்படும் நீதிபதியின் நேர்மைக் குணத்தை விட, ஒட்டுமொத்த நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவது முக்கியம்! இப்படி அவர் கீழமை நீதிமன்றத் தீர்ப்புகளில் குறை கண்டு மேல்முறையீடாக, அவற்றை சுயமோட்டோவாக எடுத்தால் அது சிந்து பாத் கதைபோல முடிவற்றதாகக் கிளம்பும்! இந்த நீதிபதி எடுத்த முடிவை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் மற்றைய உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயல்படத் தொடங்கினால் அதன் விளைவாக, கீழமை நீதிமன்றங்களால் பல வழக்குகளில் விடுவிக்கப்பட்ட பிரதமர், உள்துறை அமைச்சர், மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் என ஏராளமானோர் சுயமோட்ட வில் சிக்குவர்! பின்னர் நீதிபதியே குறிப்பிட்டுள்ள கடவுளாலும், இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாத நிலைதான் உருவாகும்!

- சிலந்தி

Also Read: மோடி அமித்ஷா கூட்டம் இன்னும் திமுகவைப் பற்றி முழுவதுமாக அறியவில்லை.. தென்றல் அல்ல நாங்கள் - சிலந்தி!