Politics

”இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முயற்சி”.. வைகோ ஆவேசம்!

ஆர்எஸ்எஸ் இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றுவதற்கு முனைந்திருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பா.ஜ.கவை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

உச்சி மாநாடு தொடங்கும் 9-ஆம் தேதி இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளிக்க இருக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘பாரத குடியரசு தலைவர்’ ‘President of Bharat’ என அச்சிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், வழக்கத்துக்கு மாறாக இவ்வாறு அச்சிடப்பட்டிருக்கிறது.

‘ஆசியான் இந்தியான்’ உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா செல்கிறார். பிரதமரின் பயண அறிவிப்பிலும் ‘பாரதப் பிரதமர்’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஹரித்வாரில் நடந்த விழாவில், அகில பாரதிய அஹாரா பரிஷத் தலைவர் சுவாமி ரவிந்திர புரி பேசும் போது, ஜாதக கணிப்புப்படி, அடுத்த 20 - 25 ஆண்டுகளில் அகண்ட பாரதம் என்ற கனவு நனவாகும் எனக்கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என தத்துவ ஞானி அரவிந்தர் கூறியுள்ளார். இந்தியா குறித்து அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தர் கூறியதில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

இந்தியா குறித்து சுவாமி ரவிந்திர புரி கூறியதில் முழு நம்பிக்கை உள்ளது. அவர் கூறியது போல் நிச்சயம் நடக்கும். அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்”என்று பேசினார்.

கடந்த மே 28ஆம் தேதி இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. அந்தக் கட்டிடத்திற்குள் இடம் பெற்றிருந்த சுவர் ஓவியங்களில் ஒன்று அகண்ட பாரதம் என்பதை சித்தரிக்கிறது.

இதற்கு ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவவாதிகள், “அகண்ட பாரதத்தின் கருத்து பண்டைய பாரத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. சாணக்கியர் பண்டைய காலத்தில் அகண்ட பாரதம் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார், அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒரு அதிகாரத்திற்கும், நிர்வாகத்திற்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும். உண்மையில், இந்து சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரும் ‘அகண்ட பாரதம்' என்ற கருத்தை ஆதரித்தார்” என்று விளக்கம் தருகின்றனர்.

இந்தியாவை ‘பாரதம்’ என்றே அழைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், பாஜக கூப்பாடு போடுவதின் உண்மை நோக்கம் என்ன?

பரதன் என்ற அரசர் சந்திர குல வம்சத்தைச் சேர்ந்தவன். முதல் சக்கரவர்த்தியாக இந்து தேசத்தை ஆண்டவன் அவன் தானாம்.

தன்னுடைய இராஜ்யத்தில் இந்து தேசத்தின் சகலப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குடையின் கீழ் ஆண்டான் என்று, மகாபாரதத்தில் ஒரு பாடல் வருகிறது.

எனவேதான் இந்த தேசம் ‘பாரத தேசம்’, பரத கண்டம் அவன் வழி வந்தவர்கள் பாரதியர்கள் என்று புராணங்களின் அடிப்படையிலேயே இவர்கள் வரலாற்றைத் திரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பாரத தேசம் என்றும், பாரதியம் என்றும் இவர்கள் சொல்வதும் இது இந்துக்களினுடைய நாடு என்பதைத்தான் வெளிப்படையாக பிரகடனப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவை ‘இந்தியா’ என்று அவர்கள் ஒப்புக் கொள்ளாத நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். குரு கோல்வாக்கர் விளக்கியிருக்கிறார். ‘இந்தியா’ என்றால் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் உள்ளடக்கும். ‘பாரதம்’ என்று சொன்னால் இந்துக்களை மட்டும் தான் குறிக்கும் என்று கூறுகிறார்.

பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆர். எஸ். எஸ், இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றுவதற்கு முனைந்திருக்கிறது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரே நாடு ஒரே தேர்தல்.. 5 ஆண்டுகளுக்கு 'கோல்ப்' விளையாடலாம்: கிண்டலடித்த முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி