Politics

ஊழல் மலிந்த பாரத் மாலா திட்டம் : அதானிக்கு மட்டும் விதிகளை மீறி சலுகைகளை அள்ளிதரும் ஒன்றிய பாஜக அரசு !

பிரதமரின் நெருக்கம் இருந்தால் போதும் கனவிலும் நினைக்காத திட்டங்களும் கிடைக்கும் என்பது ஒன்றிய பா.ஜ.க., அரசின் சித்தாந்தமாக மாறிவிட்டதோ என்று ஐயப்படுகின்ற அளவுக்கு எங்கும் நிறைந்திருக்கிறார் அதானி. எதிர்க்கட்சிகள் தரப்பில் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, பா.ஜ.க.,வுக்கு தாராள நிதி தரும் தொழிலதிபர்களின் நிறுவனங்கள், பா.ஜ.க.,வின் முக்கிய பிரமுகர்களின் நிறுவனங்களுக்கு தகுதியில்லாத போதிலும் திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது பாரத் மாலா திட்டம். நாட்டின் எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகள், துறைமுகங்கள், சுற்றுலா தலங்கள், 100 மாவட்ட தலைமையகங்கள் ஆகியவற்றை இணைக்கும் 34 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் நீள சாலை அமைப்பது தான் பாரத் மாலா திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்று என்பதால் தகுதி வாய்ந்த, முன் அனுபவம் பெற்ற நிறுவனங்களுக்குதான் இந்த திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பது காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை.

ஆனால், பாரத் மாலா திட்ட பணிகள் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கை, முறைகேடுகள், விதி மீறல்களின் உச்சத்தை பிரதிபலிப்பதாகவும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. காரணம், அனுபவமும், தகுதியும் இல்லாத போதும், பா.ஜ.க.,வுக்கு தாராள கட்சி நிதி வழங்கிய மற்றும் பா.ஜ.க., தலைவர்களின் நிறுவனங்களுக்கும் விதிகளை மீறி திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன.

Bharath mala project

அதானி நிறுவனத்துக்கு சாலை பணிகளில் அனுபவம் இல்லாதபோதும், பிறதுறை நிறுவனங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட துறை அனுபவங்களை தனதாக்கி எந்த வகையிலாவது சம்பந்தம் இல்லாத திட்டங்களை கூட டெண்டர் எடுத்து விடுகிறது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கூடிய அளவிற்கு இந்த ஊழல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றிய அரசின் ஆதரவுடன் மின்துறை, துறைமுகங்களை தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு துறையாக அதானி நிறுவனம் கபளீகரம் செய்து வருகிறது. சமீபத்தில் கூட, மும்பையில் தாராவி குடிசை மேம்பாட்டு திட்டப் பணிகளை ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க., கூட்டணி அரசு கொடுத்ததற்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. இதனால்தான், அதானிக்கு மட்டும் விதிகளை மீறி சலுகைகளை அள்ளித்தருவதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.