Politics
“காங்கிரஸால் தான் மோடியே ஆட்சியில் இருக்கிறார்..” - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கு !
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளுங்கட்சியான பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி புந்தேல்கண்டில் உள்ள சாகர் மாவட்டத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தொண்டர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கார்கே, பாஜவை விமர்சித்ததோடு சில வாக்குறுதிகளையும் கொடுத்தார். இதுகுறித்து பேசிய அவர், "மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் பாஜக அரசு சட்டவிரோதமானது. பாஜகவினர் எங்களிடம் (காங்கிரஸ்) எம்எல்ஏக்களை திருடி மக்களிடையே பிளவை உருவாக்கியுள்ளனர்.
பழங்குடியினரின் முகத்தில் பாஜக தலைவர் பிரசேஷ் சுக்லா சிறுநீர் கழித்த சம்பவத்திற்கு, முதல்வர் சிவராஜ் செளகான், பழங்குடியினரின் கால்களைக் கழுவியதாகக் கூறினார். ஆனால், கால்களைக் கழுவினால் உடம்புக்குள் போன சிறுநீர் சுத்தமாகி விடுமா?. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து 50% கமிஷன் வசூலித்து வருகின்றனர்.
சிலர் அரசியலமைப்பை மாற்ற முயல்கிறார்கள். ஆனால் 140 கோடி மக்கள் அதை பாதுகாக்க இருப்பதால் அது நடக்காது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த உரிய நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுக்கவில்லை.
தலித்துகள் கடவுளாக வணங்கும் சாந்த் ரவிதாஸ் கோயிலை, டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக இடித்தனர். இதற்காக போராட்டங்களும் நடத்தப்பட்டது. இருப்பினும் அதனை பாஜக காதில் வாங்கிகொள்ளவில்லை. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால், பிரதமர் மோடி சமீபத்தில் சாகர் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சாந்த் ரவிதாஸின் நினைவு மற்றும் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
மோடி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் ஆட்சி செய்கிறார். அப்போதெல்லாம் அவர்கள் இதனை செய்யவில்லை. தேர்தல் நேரத்தில்தான் சாந்த் ரவிதாஸை அவர்கள் நினைவு கூறுகின்றனர். ஆனால் நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்தால் சாந்த் ரவிதாஸ் பெயரில் சாகர் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவோம்.
70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று பாஜகவினர் கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில், நாங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாத்தோம், அரசியலமைப்பைக் காப்பாற்றினோம். எங்களால்தான் தேர்தல்கள் நடைபெறுகின்றன, எங்களால் (காங்கிரஸால்) தான் பிரதமர் மோடியும், சிவராஜ் சிங் செளகானும் (ம.பி. முதல்வர்) ஆட்சியில் இருக்கிறார்கள்." என்றார்.
Also Read
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !