Politics

பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்தால் கூட்டணியில் நீடிக்க மாட்டோம் -பாஜகவுக்கு மிசோரம் முதல்வர் எச்சரிக்கை !

இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் அனைத்து மதம் மற்றும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பொதுவானதாக இருந்தாலும், சிவில் சட்டம் என்பது வெவ்வேறு மதங்களுக்கு வெவ்வேறாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் அனைவர்க்கும் பொதுவாக ஒரே சட்டம் இருக்கவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாள் இருந்து வருகிறது.

ஆனால், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியர் போன்றவர்களுக்கு அவர் அவர் மதத்தில் தனி தனி முறை இருப்பதால் பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அதிலும், இந்துக்கள் மத்தியில் கூட ஒரே சிவில் சட்டம் என்பது இந்தியாவில் நடைமுறையில் இல்லை.

பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு என அதில் பல்வேறு பிரிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு இடங்களில் இந்துக்களின் சில சமூகத்துக்கு பல்வேறு விளக்குகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொது சிவில் சட்டம் என்பது பல்வேறு சமூகங்கள் வாழும் இந்தியாவில் சாத்தியமற்றதாகவே பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஒரே நாடு, ஒரே மொழி என்ற வகையில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அந்த கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். சமீபத்தில், மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் பொது சிவில் சட்டத்தை உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறது. ஆனால் வாக்கு அரசியல் நடத்துபவர்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்கிறார்கள். மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்" என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மிசோரத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் பாஜக உடனான கூட்டணியில் நீடிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். மிசோரத்தில் மிசோரம் தேசிய முன்னணி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், அந்த கூட்டணி அரசில் ஒரு இடத்தில் வென்ற பாஜகவும் இடம்பெற்றுள்ளது.

அங்கு முதல்வராக சோரம்தங்கா உள்ள நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் "மிசோரமில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தினால் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், கூட்டணியை தக்க வைத்து கொள்ள பாஜக எதையும் செய்ய தயாராக இருக்கும் என்பது தெரியும்" என்று கூறியுள்ளார்.

Also Read: NLC-ல் வெளிநபர்களால் வன்முறை.. தமிழ்நாடு அரசு வன்முறையை ஒருபோதும் அனுமதிக்காது -அமைச்சர் தங்கம் தென்னரசு!