Politics

கர்நாடகா : பாஜக முன்னாள் முதல்வர் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை.. அதிரடி காட்டும் காங்கிரஸ் அரசு !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக கொண்டுவந்த ஏராளமான மதவாத திட்டங்களை மாற்றப்போவதாக அறிவித்து அதன்படி காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும், தேர்தல் வாக்குறுதியில் பாஜகவினர் செய்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா,பசவராஜ் பொம்மை உள்பட பல பாஜக நிர்வாகிகள் சட்டவிரோதமாக பணத்தை பிட்காயினில் முதலீடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி மணீஷ் கர்பிகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறும்" என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பாஜகவினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விபத்தில் குடும்பத்தையே இழந்தும் +2-வில் முதலிடம்.. மாணவி அமுதாவுக்கு உதவிகரம் நீட்டிய தமிழ்நாடு அரசு !