Politics

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத அமித்ஷா.. பாஜக ஆட்சியை பதவி நீக்கம் செய்யுங்கள் -சு.சாமி காட்டம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.

இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், மாநிலத்தில் பாஜக ஆட்சி நீடிக்கும் நிலையில், அந்த அரசை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

இதனிடையே இந்த கலவரத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு உற்பட்டது. அந்த துறைக்கு அமித்ஷா அமைச்சராக இருக்கும் நிலையில், இது அமித்ஷாவின் தோல்வி என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே பாஜகவில் நிர்வாக திறமை உள்ளவர்கள் யாரும் இல்லாத நிலையில், தற்போது அமித்ஷாவின் நிர்வாகதிறன் இல்லாதது பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜகவை அரசை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது. அரசியலமைப்பின் 356வது சட்டப்பிரிவின் கீழ் மத்திய ஆட்சியை கொண்டு வர வேண்டும். அமித்ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Also Read: தமிழ்நாடு ஆளுநரின் 'சேடிச' மனப்பான்மை.. கேரள ஆளுநரை உதாரணமாக காட்டி சிலந்தி கட்டுரை விமர்சனம் !