Politics

கலவரம் நடத்திய பஜ்ரங்தள் அமைப்பினர்.. தடியடி நடத்திய காவல் அதிகாரிக்கு தண்டனை.. பாஜக அரசு அட்டுழியம்!

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் கலவரம் நடத்திய பஜ்ரங்தளம் அமைப்பினரை காவல்துறை விரட்டிய நிலையில், இதற்கு காரணமான அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பலசியா சதுக்கத்தில் உரிய அனுமதி இல்லாமல் கூடிய இந்துத்துவ கும்பலான பஜ்ரங்தளம் அமைப்பினர், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள இஸ்லாமியர்களின் கடைகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்நிலைய ஆய்வாளர் சஞ்சய் சிங் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியும் பஜ்ரங்தளம் அமைப்பினர் கலவரத்தை நிறுத்தாததால் கலவரக்காரர்களை தடியடி நடத்தி அப்புறப்படுத்த ஆய்வாளர் சஞ்சய் சிங் உத்தரவிட்டார்.

அதன்படி போலிஸார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை அங்கிருந்து விரட்டினர். மேலும், சிலர் காவல்துறையினரை தாக்கியதில் 5 காவலர்களும் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் கலவரம் செய்த 10க்கும் மேற்பட்ட பஜ்ரங்தளம் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் தலையிட்ட மாநில பாஜக அரசு இன்ஸ்பெக்டர் சஞ்சய் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கலவரம் செய்து கைதானவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: பீகார் :ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை.. இந்துத்துவ கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட மதரஸா, நூலகம் !