Politics

"பாஜகவுடன் சேர்வது என்பது அரசியல் தற்கொலைக்கு சமம்" - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத் பவார் !

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பா.ஜ.க தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா மகாவிகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்று துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ம்காவிகாஸ் அகாடி கூட்டணியை பாஜக உடைத்துவிட்டதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணியில் இணையும் என்றும் பாஜகவினர் வதந்தி பரப்பிவந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு முடிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை சந்தித்துப்பேசினார். அப்போது சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் உடனிருந்தார்.

இந்த நிலையில், தற்போது சஞ்சய் ராவத் தனது கட்டுரையில் சரத் பவார் பாஜக குறித்து பேசியதை பதிவுசெய்துள்ளார். அதில், "யாரேனும் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு எடுத்தால், அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.. ஆனால் ஒரு கட்சியாக நாங்கள் ஒருபோதும் பாஜகவுடன் செல்ல மாட்டோம்.பாஜகவில் சேரும் நபர்கள் அரசியலில் தற்கொலை செய்து கொள்வதாகவே அர்த்தம்" என சரத் பவார் கூறியதாக சர்ச்சைகளுக்கு சஞ்சய் ராவத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also Read: கேமராக்கள் முன் முன்னாள் MP-யை சுட்டுக்கொல்ல காரணம் இதுதான்- உ.பி படுகொலை குற்றவாளிகள் வாக்குமூலம் !