Politics

புல்வாமா தாக்குதல்: உளவு தகவல் இருந்தும் வீரா்களை சாலை வழியாக பயணிக்க வைத்தது ஏன்? - காங்கிரஸ் கேள்வி !

2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து யாராலும் மறக்க முடியாது. தீவிரவாதி ஒருவன் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 44 சி.ஆர்.பி.எஃப் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிரவைத்தது.

இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து அப்போதே ஒன்றிய அரசுக்குப் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு அனைத்து கேள்விகளையும் மவுனமாகவே கடந்து விட்டது. ஆனால் புல்வாமா தாக்குதல் குறித்து எதுவும், பேசக்கூடாது என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அப்போது ஜம்மு காஷ்மீருக்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி வயர் இதழுக்காகக் கரண் தாப்பர் நடத்திய பேட்டி ஒன்றில்தான் சத்யபால் மாலிக் பிரதமர் மோடி மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் கூறும் அவர், "2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மிகப்பெரிய தோல்வி.இந்த சம்பவம் நடந்தபோது உள்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் இருந்தார். அப்போது சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் செல்வதற்கு விமானம் கேட்டபோது உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. அவர்கள் சாலை மார்க்கமாகச் செல்ல ஆணையிடப்பட்டது.

பின்னர் புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு பிரதமர் மோடி தன்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து அதிகம் பேசவேண்டாம் என அறிவுறுத்தினார்.தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதே கருத்தைத்தான் தன்னிடம் கூறினார். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மீது பழியைச் சுமத்தி அரசாங்கத்திற்கும், பா.ஜ.கவிற்கும் தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதே நோக்கம் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன்.

புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட RDX வெடிமருந்து பாகிஸ்தானிலிருந்து கார் மூலம் கொண்டு வரப்பட்டு 10 - 15 நாட்கள் காஷ்மீருக்கள் சுற்றித்திருந்தது உள்துறைக்குத் தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. இது மிகப்பெரிய தோல்வி” என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள் மூலம் ஆதாயம் பெற பாஜக முயன்றது இதன்மூலம் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சி.ஆா்.பி.எஃப் வீரா்களுக்கு விமானம் மறுக்கப்பட்டது ஏன்? பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தும், வீரா்களை சாலை மாா்க்கமாக பயணிக்க வைத்தது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோா் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ் “சத்யபால் மாலிக்கின் கருத்துக்கு பாஜக அரசு பதிலளிக்கவேண்டு. குறைந்தபட்ச நிா்வாகம், அதிகபட்ச மெளனம் என்ற கொள்கையோடு தான் பாஜக அரசு இயங்கி வருகிறது. இந்த விவகாரத்தில், எதிா்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது பொறுப்பு அரசுக்கு உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், ”சி.ஆா்.பி.எஃப் வீரா்களுக்கு விமானம் மறுக்கப்பட்டது ஏன்? பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தும், வீரா்களை சாலை மாா்க்கமாக பயணிக்க வைத்தது ஏன்? ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பினா் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவு தகவல் வந்த நிலையிலும் அவை ஏன் புறக்கணிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு 300 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிமருந்து எப்படி கிடைத்தது? “ என பாஜக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Also Read: ஆளுநரை கண்டித்து நாங்களும் தீர்மானம் நிறைவேற்றுவோம் -முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம் !