Politics

"தேசிய அளவில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுதியான குரலாக மாறியுள்ளது" -INDIAN EXPRESS புகழாரம் !

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி குறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில், "ஆகஸ்ட் 8, 2018 அன்று, சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில், கலைஞரின் உடல் தேசியக் கொடியால் சுற்றப்பட்ட கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் தனது தந்தையை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியபோது கூட்டம் நிம்மதியில் அழுதது. ஸ்டாலின் அவர்கள், "இப்போது ‘அப்பா’என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?" என கூறினார்.

இந்த நிகழ்வுக்கு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின் அவர்கள் தந்தையின் நிழலில் இருந்து வெளியே வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இரண்டு விவகாரங்களை அவர் செய்துள்ளார். ஒன்று, ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் வகையில் நிர்வாகத் திட்டங்களை வடிவமைத்து வழங்கும் திறனை நிரூபித்துள்ளார். இரண்டாவது, ஒரு மாபெரும் கூட்டணியை அடுத்தடுத்து அரசியல் வெற்றிகளுக்கு வழிநடத்தும் திறனையும் நிரூபித்துள்ளார். தற்போதைய நிலையில், பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக தேசிய அரசியலிலும் ஸ்டாலின் அவர்கள் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக உச்ச நிலையை தற்போது அடைந்துள்ளார். சிறு வயது முதலே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், 1966ல் கோபாலபுரத்தில் தி.மு.க., இளைஞரணியை தொடங்கினார். தொடர்ந்து பல ஆண்டுகளாக உழைப்பின் மூலம் சென்னை மாநகராட்சி மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என கட்சி மற்றும் ஆட்சியில் பல்வேறு பதவிகளை ஏற்று அரசியலில் உயர்ந்துள்ளார்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக கட்சி மற்றும் ஆட்சியில் பல்வேறு பதவிகளில் பொறுமையாக பணியாற்றிய அவர், தற்போது மமுதலமைச்சர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். ஆகஸ்ட் 2018 -ல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் கட்சித் தலைமையை ஏற்றுக்கொண்டபோது, ​​திமுக இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்து ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தது.

எனினும் முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக அடுத்தடுத்து வென்றுள்ளது. அவர் முதலமைச்சராக இருந்த 21 மாதங்களில், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு பலனளிக்கும் பல நலத்திட்டங்களைத் அவரின் அரசு தொடங்கியுள்ளது. மக்களைச் சென்றடையும் வகையில் பல திட்டங்களைச் முதலமைச்சர் ஸ்டாலினின் அரசு செயல்படுத்தி வருகிறது.பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, விவசாயத்துக்கான பிரத்யேக பட்ஜெட், மக்கள் தேடி மருத்துவம் , ஐந்து சவரன் வரை நகைக்கடன் பெற்ற 13.50 லட்சம் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி, 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

கொரோனா தொற்று, நிதி நெருக்கடிகள், நிலுவையில் உள்ள ஒன்றிய அரசின் நிதி போன்ற சவால்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு எதிர்கொண்ட போதிலும், அவரின் அரசு தனது முதல் ஆண்டில் பல மைல்கற்களை எட்டியுள்ளது. மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்தவும், சுற்றுசூழல் மற்றும் வன வளத்தை பாதுகாக்கவும், கையால் துப்புரவு தொழிலை முடிவுக்கு கொண்டு வரவும் அவர் பல முயற்சிகளை எடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வழிநடத்தி வருகிறார். அந்த கூட்டணியை அவர் அப்படியே தக்கவைத்தும் வருகிறது. இதுதவிர தேசிய அளவில், இடஒதுக்கீடு, கூட்டாட்சி போன்ற பிரச்சனைகளில் திமுக மிக உறுதியான குரலாக மாறியுள்ளது. மாநில அரசியலுக்கு அப்பால் வளர்ந்து தேசிய அரங்கில் நுழையும் ஸ்டாலினின் திறன் குறித்து பல தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர் வருவாரா ?" என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: “வரலாற்று வெற்றியை பெற்றுள்ளோம்.. பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்” : முதலமைச்சர் பேச்சு!