Politics

“ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு..?” -EPS அநாகரீக பேச்சுக்கு இயக்குநர் நவீன் பதிலடி!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுகிறது. தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

காங்கிரஸுக்கு ஆதரவாக அதன் கூட்டணி கட்சிகள், மேலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆதரவு தெரிவித்துள்ளது. தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பிரசாரத்தில் மக்களிடம் பேசும்போது ஆவேசப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தரக்குறைவாக பேசினார். மேலும் ஆம்பளயாக இருந்தால், வீரம் இருந்தால் என்றும் அநாகரீகமாக பேசினார். பொதுவெளியில் ஒரு அரசியல் கட்சி தலைவர் இவ்வாறு பேசுவது கண்டனத்திற்குரியது என்று பலரும் கருத்தும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான நவீன், எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேள்வி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நவீன் இயக்குநராக மட்டுமல்லாமல், பொது அறிவு, அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் கருத்து தெரிவித்து வருவார். இவரது உருவாக்கத்தில் வெளியான படங்களும் மறைமுக அரசியலை பேசும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “உங்க வேலை முடிஞ்சது.. தயவு செய்து வீட்டுக்கு போங்க..” - ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் Computer !