Politics

SEBI,RBI-யின் முக்கிய பொறுப்பில் அதானி மகனின் மாமனார்.. முறைகேடுகளுக்கு துணையா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

உலக பணக்காரர்களில் ஒருவரும் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டி 88 கேள்விகளை முன்வைத்தது.

இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடுமையாக சரிந்து வருகிறது. அதானி குழும நிறுவனங்கள் போலியான முறையில் தங்கள் பங்கிகளின் மதிப்பை உயர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டு அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை மீது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. மேலும் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 18-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியின் முறைகேடுகள் மற்றும் பித்தலாட்டங்களை மட்டும் வெளியே விடாமல் அதன் முறைகேடுகளை தடுக்காமல் மௌனமாக இருந்த பங்குசந்தையை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செபி அமைப்பு குறித்தும் கேள்வி எழுதியது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும் கண்மூடி மௌனமாக இருந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இது தவிர சட்டத்துக்கு விரோதமாக அதானியின் நிறுவனத்தில் அவரின் குடும்பத்தினரே அதிகம் ஆதிக்கம் செலுத்தியதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில், அதானியின் மகன் கரண் அதானியின் மாமனார் சைரில் சுரேஷ் என்பவர் செபி மற்றும் ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சைரில் சுரேஷ் இந்தியாவின் பிரபலமான கார்ப்பரேட் வழக்கறிஞராக இருப்பதோடு, செபி மற்றும் ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார் (RBI Working Commitee மெம்பெர், SEBI Corporate Governance Board Member) . இவரின் அதிகாரம் மற்றும் அழுத்தம் காரணமாகவே செபி மற்றும் ரிசர்வ் வங்கி போன்றவை அதானியின் மோசடிகள் குறித்து கண்டும் காணாமல் இருந்ததாக குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்படுகிறது. அதானி ஏற்கனவே பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பதும் அதானியின் விமானத்தில் தான் 2014-ம் ஆண்டுக்கான பிரச்சாரத்தை மோடி முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: "BC பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்" - நாடாளுமன்றத்தில் திமுக MP மசோதா தாக்கல்!