Politics
விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்.. பகிரங்க மன்னிப்பு கோரிய பாஜக எம்.பி.. அண்ணாமலை நிலை என்ன ?
கடந்த டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாவும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானம் புறப்படும் நேரத்தில் 'எமர்ஜென்சி' கதவிற்கான பட்டனை அழுத்தி விளையாட்டு காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், பயணிகள் அச்சமடைந்ததோடு மட்டுமின்றி, விமானத்தில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மீண்டும் விமானத்தை சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும்தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி "2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் எமர்ஜென்சி வழியை திறந்தது இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாதான் என்று உறுதிப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக கூறியுள்ள அந்த பயணி " விமானத்தின் ஊழியர்கள் பயண பாதுகாப்பு குறித்து தெரிவித்துக் கொண்டிருந்தபோது, எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருந்த தேஜஸ்வி சூர்யா, அதன் கைப்பிடியைப் பிடித்து இழுத்தார். அதனால் எமர்ஜென்சி கதவி திறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு பேருந்து ஒன்றில் அமரவைக்கப்பட்டோம்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதும் தேஜஸ்வி மன்னிப்பு கேட்டார். அதன் பிறகே, அவர் தொடர்ந்து அந்த விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் அவரது இருக்கை மாற்றப்பட்டதோடு தேஜஸ்வியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரத்தில் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா, தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக விமான போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், "தவறுதலாகவே எமர்ஜென்சி கதவை திறந்துள்ளார் என்றும், தனது செயலுக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரிவிட்டார் என்றும் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். எனினும் அவரோடு இருந்த அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!